12 வருடங்களாக மலைப் பாம்பு ஒன்றை வளா்த்து வந்த பெண் ஒருவரை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் எச்சரித்து விடுதலை செய்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நாவற்குடா நொச்சிமுனை கிராமத்தில் கடந்த 12 வருடங்களாக மலைப் பாம்பு ஒன்றை வளர்த்து வந்த பெண் ஒருவரை புதன்கிழமை மாலை காத்தான்குடி பொலிசார் கைது செய்துள்ளனர்.
மட்டக்களப்பு பிரதி பொலிஸ் மா அதிபர் வி.இந்திரனின் ஆலோசனையின் பேரில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜித் பிரசன்னாவின் வழிகாட்டலில் காத்தான்குடி பொலிசாரும் வன விலங்கு பாதுகாப்பு அதிகாரிகளும் குறித்த பெண்ணின் வீட்டுக்கு சென்று அங்கு அவர் வளர்த்து வந்த அந்த மலைப்பாம்பு மற்றும் ஐந்து ஆமைகளை கைப்பற்றியதுடன் அப்பெண்ணையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். இதையடுத்து கைப்பற்றப்பட்ட பாம்பு மற்றும் ஆமைகளை வியாழக்கிழமை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் காத்தான்குடி பொலிசார் ஒப்படைத்ததுடன் குறித்த சந்தேக நபரான ராஜகுமாரி எனும் அப்பெண்ணையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கை விசாரணை செய்த மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி என்.எம். அப்துல்லா குறித்த பாம்பை வளர்த்த அப் பெண்ணை எச்சரித்து விடுதலை செய்ததுடன் பாம்பு மற்றும் ஆமைகளை வனவிலங்கு பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் மட்டக்களப்பு நீதிமன்றத்தை பெரும் பரபரப்புக்குள்ளாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !