Headlines News :
Home » » சிங்கம் 2' திரை விமர்சனம்.

சிங்கம் 2' திரை விமர்சனம்.

Written By TamilDiscovery on Thursday, July 4, 2013 | 10:02 PM

படம் ஒன்று வெற்றி அடைந்தால், அதன் இரண்டாம் பாகத்தையும் சூட்டோடு சூடாக வெளியிடும் காலகட்டத்தில் தமிழ் சினிமா இப்போதிருக்கிறது. பில்லா-நாகராஜசோழன் எம் எல் ஏ-முனி-விஸ்வரூபம்-துப்பாக்கி என்று அதே வரிசையில் இப்போது இயக்குனர் ஹாரியின் ‘சிங்கம்’.

விஜய் வேண்டாமென்று நிராகரித்த கதைகள் வேறு நடிகர்கள் நடித்து ஹிட் ஆகியிருக்கின்றன. அப்படியான ஒன்று தான் சூர்யாவின் சிங்கம். அதன் முதல் பாகம் வந்து ஹிட் அடிக்க, இந்தியிலும் அஜய் தேவ்கன்,காஜல் நடிப்பில் ரீமேக் ஆகி வெளியாகியது. அந்த வெற்றியை தொடர்ந்து, சிங்கம் பார்ட் 2 வெளிவந்திருக்கிறது. சிங்கம் படத்துக்கான விளம்பரங்கள், ப்ரொமோஷன் நிகழ்சிகள் என்று கடந்த ஒரு மாதமாகவே அனைத்து டிவி சேனல்கள் ஒரு பக்கம் என்றால், சூர்யாவின் நடிப்பு,இயக்குனர் ஹாரியின் இயக்கம், மற்றும் இதன் முதல் பாகத்தின் பிரமாண்டமான வெற்றி என்பன மறுபக்கம்  படத்துக்கான எதிர்பார்ப்பை எகிறிவிட்டிருந்தன.

சிங்கம் 1இன் இறுதியில் பொலீஸ் வேலையிலிருந்து விலகி மளிகை கடை வைப்பதாக சொல்லிவிட்டு தூத்துக்குடியில் ஆயுத கடத்தல் நடக்கும் விவகாரத்தை கவனிக்க விஜயகுமார் துரைசிங்கத்தை அனுப்பி வைத்திருப்பார். அதன் தொடர்ச்சியாக தான் சிங்கம் 2 வந்திருக்கிறது. தூத்துக் குடியில் ஒரு கல்லூரியில் என்சிசி ஆபீசராக வேலை பார்த்துக்கொண்டு தூத்துக்குடியில் ஆயுத கடத்தல் நடக்கிறதா என்பதை நோட்டம்விட்டு வரும் துரைசிங்கத்துக்கு அது ஆயுத கடத்தல் இல்லை, ஹெரோயின் கடத்தல் என்பது தெரியவருகிறது.

சகாயம், தங்கராஜ் (சங்கமம் ரகுமான்), பாய் என்கின்ற மூன்று தாதாக்கள் தூத்துக்குடியில் இயங்க, இவர்களுக்கெல்லாம் தலையாக 'டானி' இயங்கிக்கொண்டிருப்பதை கண்டுபிடிக்கிறார் சிங்கம்.ஆபரேஷன் D' என்கின்ற பெயரில், இடையே வரும் தடைகளையெல்லாம் தகர்த்தெறிந்து இந்த போதை மருந்து கடத்தல் கும்பலை ஒட்டுமொத்தமாக பிடித்து அழிக்கும் முயற்சியில் துரைசிங்கம் பாய்ந்து வேட்டையாடும் படலம் தான் சிங்கம் 2′.

படம் சொல்லி ‘ஹிட்’அடித்திருக்கிறது. படத்தின் ஹீரோக்கள் இருவர், ஒருவர் இயக்குனர் ஹாரி,இன்னொருவர் சூர்யா!வேகமான திரைக்கதை, பார்வையாளனை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் 'இது எப்படி சாத்தியம்' என்று கேட்க வைக்காத லாஜிக்குடன் கூடிய காட்சிகள் என்று படத்தின் வேகமான ஓட்டத்துடன் ஒட்டி இருக்கவைத்துவிடுகிறார் ஹாரி. மசாலா படம் தானே, எதை வேண்டுமானாலும் காட்டிவிடலாம் என்பதை விடுத்து திரைக்கதையில் எந்த ஓட்டைகளுமின்றி காட்சிகளை அமைத்து மற்றைய மசாலா பட இயக்குனர்களுக்கு ஹாரி ஒரு ‘குட்டு’ போட்டிருக்கிறார் என்றே சொல்லலாம்! ஹாரி தான் இப்படி என்றால், இயக்குனரின் ஒவ்வொரு காட்சிகளுக்கும் உயிர்கொடுத்திருக்கிறார் சூர்யா. சூர்யாவின் நடிப்பு பிரமாதம்! ஆக்க்ஷன் காட்சிகளில் தூள் பரத்துகிறார். பாடல் காட்சிகளில் துள்ளலான நடனம், அதுக்கேற்ற நடிப்பு, கோபம் என்று சூர்யாவுக்கே பொருந்திய கதாபாத்திரமாகிவிட்டது சிங்கம் 2'!

என்சிசி ஆபீசர் வேலையை களைந்துவிட்டு பொலீஸ் டியூட்டிக்கு பொலீஸ் ட்ரெஸ்’சை மறுபடி மாட்டிக்கொண்டு சிங்கம் வேட்டைக்கு கிளம்புகையில் நம்மை அறியாமலேயே க்ளாப்ஸ் வாங்கிவிடுகிறார் சிங்கம்! ஹாரி படத்தின் வழமையான டாட்டா சுமோக்கள், அரிவா, வெள்ளை வேஷ்டி சட்டை கூட்டம்னு இருந்தாலும், படம் ரெண்டே முக்கால் மணி நேர படமாக இருந்தாலும்,எ ந்த இடத்திலும் பார்வையாளர்களை சலிப்படைய வைக்காத கதையின் வேகம், ட்விஸ்ட்டுகள், சீட் நுனிக்கே இழுத்துவரும் விறுவிறுப்பு.

சிங்கம் 1′ இல் சிங்கத்தின் நாயகியாக வந்த அனுஷ்காவுக்கு போட்டியாக ஹன்சிகா பாடசாலை மாணவியாக வந்து சிங்கத்தின் மேல் காதல் கொள்கிறார். நன்றாக மெலிந்திருக்கிறார். அப்படியே அனுஷ்காவை அழகில் ஓரம்கட்டிவிடுகிறார். விஜயகுமார், விவேக்ராதாரவி, மனோரமா, நாசர் என்று பழைய கூட்டணி இதிலும் தொடர்கிறது. கூடவே சந்தானத்தின் வருகை நகைச்சுவைக்கு அழுத்தம் சேர்த்திருக்கிறது. விவேக்கை விட சந்தானம் அதிகமாய் ஸ்கோர் பண்ணுகிறார். இரட்டை அர்த்த காமெடிகளுக்கு தியேட்டர் அல்லோலகல்லோலப்படுகிறது! சூர்யா ஒரு பக்கம் மாஸ்னா, சந்தானம் மறுபக்கம் மாஸ்!

தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் ஏலவே வெளிவந்திருந்தாலும், பெரிதாக ஸ்கோர் பண்ணியிருக்கவில்லை. ஆனால் படத்துடன் சேர்த்து பார்க்கையில் பாடல்கள் அனைத்தும் பிடித்திருக்கிறது. எல்லாம் ஹாரி மேஜிக்! ஓபினிங் சாங்’ இல் அஞ்சலி வந்து ஆடிச்செல்கிறார். ஹன்சிகாவின் காதல் பாடலான’ புரியவில்லை இது புரியவில்லை’பாடல்  நன்றாக இருந்தது. பாடல் காட்சிகளில் விஜய் போன்று ‘முட்டி மூமெண்ட்ஸ்” போடுமளவுக்கு மெருகேறியிருக்கிறார் சூர்யா!

படத்தில் ஒரு இலங்கை வில்லனும் வருகிறார். ஆம், ஒரு சிங்கள வில்லனை அழைத்து சிங்கத்தை போட்டுத்தள்ளும் பொறுப்பை ஒப்படைக்கிறார்கள் வில்லன் க்ரூப். ஆனால் இறுதியில் தாங்களே அவனை போட்டுத்தள்ளி யிருந்தார்கள். தமிழனுக்கு கெடுதல் விளைவித்த சிங்களவனை அழைத்து அடித்து கொன்று பழிதீர்த்திருக்கிறார்கள் என்றார் பக்கதிலிருந்த ஒருவர். கூடவே ‘இந்து சமுத்திரத்த ஆளுவது இந்தியா’ தாண்டா அப்பிடின்னு ஒரு பஞ்ச் வரும் படத்தில். அது கூட இப்போதிருக்கும் சீனா-இந்தியாவின் இந்து சமுத்திர போட்டியில் இந்தியா தான் ‘தலை’அப்பிடின்னு சீன அரசுடன் நல்லுறவாடும் இலங்கைக்கு விடுத்திருக்கும் எச்சரிக்கை என்றும் அதே நண்பர் கமெண்ட் அடித்தார். சிரித்து மகிழ்ந்தேன்.

படத்தில் குறைகள் என்று சொல்லிக்கொள்ள பெரிதாக எதுவுமே இல்லை. வழக்கமாகவே ஹாரி படங்களில் சத்தம், வன்முறை அதிகமாக இருக்கும். க்ளைமேக்ஸ்’இல் மசாலா படத்துக்கே உரிய  ஒரு சில லாஜிக் பிழைகள் தென்படலாம். அதை தவிர வேறு குறைகள் தெரியவில்லை. உலகம் முழுவதுமாக  2400 தியேட்டர்களில் ரிலீஸ் ஆன சிங்கம்-2, அடுத்த இரண்டு வாரத்துக்கு போட்டியில்லாமல் சக்கைபோடு போடப்போகிறது. காரணம் அடுத்த பெரிய படமான மரியான் 19ஆம் தேதி தான் வெளிவருகிறது. அதனால் சிங்கம் 1′ஐ போல சிங்கம் 2′ம் மெகா ஹிட் அடிக்கும் போல்தான் தெரிகிறது!
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template