Headlines News :
Home » » பஷில் ராஜபக்ஷவின் இந்தியா விஜயமும் 13 ஆவது திருத்தச் சட்டமும்.

பஷில் ராஜபக்ஷவின் இந்தியா விஜயமும் 13 ஆவது திருத்தச் சட்டமும்.

Written By TamilDiscovery on Wednesday, July 3, 2013 | 11:39 PM

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள் தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சை நிலைமையையடுத்து அது தொடர்பில் இந்தியாவுக்கு முழுமையான விளக்கம் ஒன்றை அளிக்கும் நோக்கில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான பஷில் ராஜபக்ஷ உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற் கொண்டு இன்று இந்தியா விரைகின்றார்.

இன்று காலை 9 மணியளவில் ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டு தனது இந்திய விஜயம் குறித்து அமைச்சரவைக்கு விளக்கமளிக்கவுள்ள அமைச்சர் பஷில் ராஜபக்ஷ அதன் பின்னர் இந்தியா பயணமாகின்றார். அமைச்சரவையில் 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவானதும் எதிரானதும் கருத்துக்கள் நிலவுகின்றமையின் காரணமாகவே அமைச்சர் இது தொடர்பான விளக்கம் ஒன்றை அளிக்கவுள்ளார். இரண்டு நாட்கள் இந்தியாவில் தங்கியிருக்கும் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் மற்றும் வர்த்தக கைத்தொழில் அமைச்சர் சுற்றுலாத்துறை அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

குறிப்பாக வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் ஆகியோருடன் இன்று வியாழக்கிழமை மாலை நடத்தப்படும் பேச்சுவார்த்தைகளின்போதே 13 ஆவது திருத்தச் சட்டம் குறித்து ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

குறிப்பாக 19 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக 13 ஆவது திருத்தச் சட்டத்தில் செய்யப்படவுள்ள திருத்தம் குறித்து அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இந்திய தரப்புக்கு விளக்கமளிக்கவுள்ளார்.

மேலும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடத்தப்படவுள்ள வட மாகாண சபைத் தேர்தல் மற்றும் 13 ஆவது திருத்தச் சட்டம் உள்ளிட்ட அரசியலமைப்பு திருத்தங்கள் குறித்து ஆராய நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் தற்போதைய நிலைமை என்பன குறித்தும் இந்திய தரப்பினருக்கு தெளிவுபடுத்தவுள்ளார்.

இதேவேளை இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் ஆகியோருடனான சந்திப்பின்போது 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இந்திய வர்த்தக கைத்தொழில் அமைச்சர் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆகியோரை நாளை வெள்ளிக்கிழமை சந்தித்து பேச்சு நடத்தவுள்ள அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான பொருளாதார வர்த்தக உறவுகளை பலப்படுத்துவது குறித்து விரிவான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.

நாளை வெள்ளிக்கிழமையுடன் தனது இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பவுள்ள அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துக்கூறவுள்ளார்.

இது இவ்வாறு இருக்க இந்திய விஜயம் குறித்து கருத்து வெளியிட்டிருந்த அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அரசியல் மற்றும் பொருளாதார வர்த்தக உறவுகளை பலப்படுத்துவதற்கும் அவற்றை விரிவுபடுத்துவதற்குமே நான் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளேன்.

இந்திய விஜயத்தின்போது பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன். குறிப்பாக வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் உள்ளிட்ட பலரையும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளேன்.

அத்துடன் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பல்வேறு விடயங்கள் குறித்தும் விரிவாக பேசப்படவுள்ளது. குறிப்பாக வட மாகாண சபைத் தேர்தல் மற்றும் அரசியலமைப்பு திருத்தங்கள் குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழு ஆகியவற்றின் முன்னேற்றங்கள் குறித்து இந்திய தரப்பினருடன் கலந்துரையாடப்படும். விசேடமாக வட மாகாண சபைத் தேர்தல் குறித்தும் அதன் முன்னேற்ற நிலைமை குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் அடுத்தவாரம் இலங்கை வரவுள்ளதுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அரச தரப்பு முக்கியஸ்தர்களுடனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியவற்றுடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

அத்துடன் சிவ்சங்கர் மேனனின் விஜயத்தைத் தொடர்ந்து இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான்ங குர்ஷித்தும் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதுடன் அரச தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

13 ஆவது திருத்தச் சட்டத்தை முற்றாக அரசியலமைப்பிலிருந்து அகற்றவோ அல்லது அதிலிருந்து பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை நீக்கவோ இந்தியாவிடம் ஆலேசானை பெறவேண்டிய அவசியம் இல்லை என்று கடந்தவாரம் பெளத்த மத அமைப்புக்களின் ஒன்றியமான 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஒழிப்பதற்கான அமைப்பு கூறியிருந்தது.

எனினும் நேற்று முன்தினம் கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்தித்த ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இந்தியாவுடன் கலந்தாலோசிக்காமல் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் அரசாங்கம் கைவைக்குமானால் அது இரண்டு நாடுகளுக்கு இடையிலான உறவில் பாரிய விரிசலை ஏற்படுத்திவிடும். இலங்கை இந்திய உடன்படிக்கை என்பது தனிப்பட்ட உடன்படிக்கை அல்ல. மாறாக இரண்டு நாடுகளுக்கு இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இராஜதந்திர ரீதியான ஒப்பந்தமாகும் என்று குறிப்பிட்டிருந்தார்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template