ஆப்கானிஸ்தானின் தென் பகுதி மாகாணமாகிய உருஸ்கான் பொலிஸ் நிலையத்தில் நேற்று நடந்த தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 12 பேர் பலியாகியுள்ளதுடன் 5 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதில் பலரும் பொலிஸார் எனவும், அவர்கள் உணவறையில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது தாக்கப்பட்டுள்ளனர் எனவும் கூறப்படுகிறது.
திரின்கோட் என்ற இடத்தில் உள்ள அந்த பொலிஸ் நிலைய காந்தகார் பகுதிக்கு செல்லும் சாலையைப் பாதுகாக்கும் பணியில் இருந்த பொலிஸார் உபயோகித்து வந்துள்ளனர். பொலிஸ் சீருடையில் இருந்த தற்கொலைப் படையினரில் ஒருவர் உள்ளே வந்ததாக புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த முகமது கெபல்வாக் தெரிவித்துள்ளார். அந்நபர் பொலிஸ் பிரிவைச் சேர்ந்தவரா? என்பது குறித்து தெளிவாகத் தெரியாத நிலையில், திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த சம்பவம் பாதுகாப்பை மீறி நடத்தப்பட்டதாகவும் எனவே, அதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஐந்து பேர் இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ளனர். இறந்தவர்களில் சிலர் பொலிஸாரின் உறவினர்கள் என்றும், மதிய உணவிற்காக அவர்கள் பொலிஸ் பணியில் இருந்தவர்களுடன் இருந்தனர் என்றும் தெரியவந்துள்ளது. இதேபோல் பாகிஸ்தான் எல்லைப் பகுதியிலும் இன்று ஒரு தற்கொலைப்படைத் தாக்குதல் நடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆப்கன் பொலிஸார் தொடர்ந்து தலிபான் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு வருகின்றனர். சென்ற மாதம்தான், நேட்டோ படையினரிடமிருந்து ஆப்கன் பாதுகாப்புத்துறை நாட்டின் பாதுகாப்புப் பொறுப்பு முழுவதையும் ஏற்றது.
அதுமுதல், இத்தகையத் தாக்குதல்கள் தினந்தோறும் தொடர்ந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !