குடியேற்ற விதிகளை மீறும் அபாயம் உள்ள பிரித்தானியாவுக்கு வரும் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா மற்றும் ஏனைய நாட்டவர்களுக்கு நாட்டுக்குள் வரும் முன் விசா பிணையாக ரொக்கத் தொகையைப் பெற பிரித்தானிய அரசு திட்டமிட்டுள்ளது.
எதிர்வரும் நவம்பர் முதல் இந்தத் திட்டத்தை அமுல்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த விசா பிணைக்கு உள்ளாகும் நாடுகளில் பங்களாதேஷ் மற்றும் கானாவும் உள்ளடங்குகின்றன. இதன்படி 6 மாத பயண விசாவில் வரும் 18 வயதுக்கு மேற்பட்டோரிடம் 4,600 டொலர்களை பிணைத் தொகையாக அறவிட பிரித்தானிய அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு பெறப்படும் பிணைத்தொகை விசா காலத்தையும் மீறி தங்குவோரிடம் அபராதமாக ஈட்டவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் தொடர்பில் பிரித்தானிய உள்நாட்டு செயலாளர் தெரேசா மே பிரதமர் டேவிட் கெம்ருனின் கன்ஸர்வேடிவ் கட்சியின் அனுமதியைப் பெற காத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2015 ஆம் ஆண்டில் பிரித்தானியாவுக்கு வருவோரின் எண்ணிக்கையை 100,000 ஆக குறைக்க பிரதமர் கெமரூன் எதிர்பார்த்துள்ளார்.
கடந்த ஆண்டில் பிரித்தானியாவுக்கு ஆறு மாத விசாவில் இந்தியாவில் இருந்து 296,000 பேரும் நைஜீரியாவிலிருந்து 101,000 பேரும் பாகிஸ்தானில் இருந்து 53000 பேரும் இலங்கை, பங்களாதேஷில் இருந்து தலா 14,000 பேரும் பிரிட்டனுக்கு சென்றுள்ளனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !