Headlines News :
Home » » பாலியல் உறவை நிரூபித்தால் அவர்கள் கணவன்- மனைவியே சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

பாலியல் உறவை நிரூபித்தால் அவர்கள் கணவன்- மனைவியே சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Written By TamilDiscovery on Tuesday, June 18, 2013 | 3:46 AM

சென்னை: திருமணம் ஆகாத பெண்ணும், ஆணும் பாலியல் உறவில் ஈடுபட்டு அதன் மூலம் அந்தப் பெண் கர்ப்பம் அடைந்தால் அவர்களை கணவன்- மனைவியாக கருத வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

கோவை பகுதியைச் சேர்ந்த மும்தாஜ் (35), அனீஷ் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) தம்பதிக்கு கடந்த 1994ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. 1999ம் ஆண்டு மனைவி, குழந்தைகளை விட்டு அனீஷ் பிரிந்துவிட்டார். இதனால் கணவர் அனீஷ் இடமிருந்து மாதம் ரூ.5,000 பராமரிப்புத் தொகை கேட்டு கோவை குடும்பநல நீதிமன்றத்தில் மும்தாஜ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, புகைப்படங்கள், அனீசுக்கு குழந்தைகள் எழுதிய கடிதங்கள், குழந்தைகளின் கல்விச் சான்றிதழ், பிறப்புப் பதிவு, ரேஷன் அட்டை பெறுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் ஆகியவை மும்தாஜ் தரப்பு ஆதாரங்களாக தாக்கல் செய்யப்பட்டன.

இரு தரப்பு வாதங்களையும், ஆதாரங்களையும் பரிசீலித்த நீதிபதி, இரண்டு குழந்தைகளும் அனீசுக்குத்தான் பிறந்தவர்கள் என்றும் அதனால் இரண்டு பேருக்கும் தலா ரூ.500 தொகையை பராமரிப்புக்காக வழங்க வேண்டும் என்றும் 2006ம் ஆண்டு உத்தரவிட்டார். ஆனாலும், அனீஷை திருமணம் செய்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்பதால் மும்தாஜூக்கு பராமரிப்புத் தொகை வழங்க உத்தரவிட முடியாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மும்தாஜ் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.எஸ்.கர்ணன் பிறப்பித்த உத்தரவில், தனது உத்தரவால் ஒரு பாவமும் அறியாத குழந்தைகளுக்கு சமுதாயத்தில் பாதிப்பு ஏற்படும் என்பதை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி கவனிக்கவில்லை. இந்த இரண்டு குழந்தைகளையும், அனீசுக்கு முறை தவறிப் பிறந்தவை என்று குடும்ப நல நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளார். குழந்தை பிறப்பின்போது, கணவன், மனைவியிடம் மருத்துவமனை நிர்வாகம் ஒப்புதல் கையெழுத்து பெறுவதுண்டு. அந்த ஆவணத்தில் கணவன், மனைவிக்காக குறிக்கப்பட்டு இருக்கும் இடத்தில் இரண்டு பேரும் கையெழுத்திட்டு இருப்பதால், அவர்களுக்குப் பிறந்த குழந்தையை முறையற்ற பிறப்பு என்று கூற முடியாது. திருமணத்தை நடத்துவது என்பது சமுதாயம் மற்றும் சடங்குகளுக்காக வைக்கப்படும் நிகழ்வு. ஆனால் சட்டத்தின் அடிப்படையில் அவை கட்டாயமல்ல. தாலி கட்டுவது, மாலை மாற்றுவது, மோதிரம் மாற்றுவது, தீக்குழியை சுற்றுவது அல்லது அரசு அலுவலகத்தில் போய் பதிவு செய்வது போன்றவை எல்லாம், மதச் சடங்குகளை பின்பற்றி சமுதாயத்தை திருப்திப்படுத்துவதற்காகத்தான். மதச் சடங்குகளை பின்பற்றி திருமணம் செய்த பிறகும், கணவன், மனைவிக்குள் பாலியல் ரீதியான உறவு இல்லாவிட்டால், அந்தத் திருமணம் சட்டப்படி செல்லாது.

எனவே ஒரு திருமணத்தின் முக்கியமான சட்டப்பூர்வமான ஆதாரம், அந்த ஜோடிகளுக்கு இடையே உள்ள பாலியல் உறவுதான். ஒருவேளை அந்தப் பெண் கர்ப்பம் தரிக்காமல் போனாலும், அவர்களுக்குள் பாலியல் தொடர்பு இருந்தது என்பதற்கான ஆதாரம் இருந்தால், இருவருமே கணவன், மனைவி என்ற உறவுக்கு உட்பட்டவர்கள்தான். இந்த வழக்கில் அனீஷ் மற்றும் மும்தாஜை வித்தியாசமாக சுய அடையாளமிட்டுக் கொண்ட கணவன், மனைவி என்றே இந்த நீதிமன்றம் கருதுகிறது. எனவே அவர்களுக்குப் பிறந்த அந்த குழந்தைகளும் முறையானவைதான். திருமண சடங்குகள் முடிந்து, அதன் பிறகு பாலியல் உறவு நடந்தால்தான் சட்டப்படி அந்த திருமணம் செல்லும். மும்தாஜ் விவகாரத்தில், திருமண சடங்குகள் இல்லாமலேயே பாலியல் உறவு நடந்திருக்கிறது. எனவே அது திருமணம்தான். எனவே கணவரான அனீஷ் தனது மனைவி மும்தாஜூக்கு மாதம் ரூ.500 பராமரிப்புச் சலவுக்காக வழங்க வேண்டும்.

ஒரு பெண்ணுக்கு 18 வயது, ஒரு ஆணுக்கு 21 வயதும் பூர்த்தியாகி (ஏற்கனவே திருமணம் ஆகாத நிலையில்) அவர்கள் பாலியல் தொடர்பு வைத்துக் கொள்வதன் மூலம், அந்தப் பெண் கர்ப்பம் தரித்தாள் என்றால், அவள் மனைவி என்றும் அவர்கள் சட்டபூர்வமான தம்பதிகளாக கருதலாம். சடங்குகளுடன் திருமணம் செய்த தம்பதிகளுக்கு என்ன சட்ட உரிமைகள் உள்ளதோ, அதே உரிமைகளை, தங்களுக்கு இடையே இருந்த பாலியல் உறவை நிரூபிக்கும் தம்பதியினரும் பெற்றுக்கொள்ளலாம் என்று அதிரடி தீர்ப்பளித்தார் நீதிபதி கர்ணன்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template