உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 14ம் தேதியில் இருந்து 17ம் தேதி வரை சுமார் 60 மணி நேரம் ஓயாத அடைமழை பெய்தது.
இதனால், அலக்நந்தா, பகீரதி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. பத்ரிநாத், கேதார்நாத் உள்ளிட்ட புனித தலங்களை வெள்ள நீர் சூழ்ந்தது. சீறிப் பாய்ந்த வெள்ளம் மண் அரிப்பை ஏற்படுத்தியதால் பல கட்டிடங்கள் சீட்டு கட்டு போல் சரிந்து விழுந்தன. சாலைகள் அடித்துச் செல்லப்பட்டன.
மழை வெள்ளத்தில் சிக்கி வெளி மாநில பக்தர்கள் உட்பட சுமார் 75 ஆயிரம் பேர் தவித்தனர். ருத்ர பிரயாக் மற்றும் கேதார்நாத் பகுதியில் அதிகமான பக்தர்கள் சிக்கிக் கொண்டனர். இவர்களில் சுமார் 30 ஆயிரம் பேர் நேற்று வரை மீட்கப்பட்டனர். மேலும் பலரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சுமார் 13 ஆயிரம் பேரை காணவில்லை என்று கூறப்படுகிறது. வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோர் பார்வையிட்டனர். வெள்ள நிவாரண பணிகளுக்காக மத்திய அரசு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. மத்திய உள்துறை மந்திரி சுஷில்குமார் ஷிண்டே தற்போது வெள்ளப்பகுதிகளை பார்வையிட்டு வருகிறார். இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உத்தரகாண்ட் மாநில முதல் மந்திரி விஜய் பகுகுணா, 'இது போன்ற பேரழிவு இமாலய வரலாற்றில் இதுவரை ஏற்பட்டதில்லை. இது இமாலய பேரழிவாகும். உத்தரகாண்ட்டை மறுசீரமைக்க பலகாலம் தேவைப்படும்.
இதுவரை 556 உடல்களை மீட்புப் படையினர் கண்டெடுத்துள்ளனர். மேலும் பல உடல்கள் சேற்றில் சிக்கியிருக்கலாம் என தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இவ்வளவு மக்கள் பலியாகியுள்ளது பரிதாபத்திற்குரியது. மீட்பு பணிகள் முடிவடைய இன்னும் 15 நாட்கள் ஆகலாம்' என்று கூறினார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !