வாஷிங்டன்(யு.எஸ்): சுமார் இரண்டாயிரம் மைல்கள், கிட்டத்தட்ட 3200 கிலோ மீட்டர் தூரம் கொண்ட அமெரிக்க - மெக்சிகோ எல்லை முழுவதையும் தடுப்பு கம்பி சுவர் எழுப்ப வேண்டும் என்று அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எல்லையை க்ராஸ் செய்த ஒரு கோடி பேர்:
அமெரிக்காவில் சட்டபூர்வமற்ற முறையில் மெக்சிகோ எல்லையை கடந்து வந்து வசிப்பவர்களின் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் மேலாகும். இவர்கள் தனியார் சிறு நிறுவனங்களிலும், வயல்கள், கால்நடை பண்ணைகள் போன்ற இடங்களிலும் மிகவும் குறைவான சம்பளத்திற்கு வேலை பார்த்து வருகிறார்கள். அவ்வப்போது எல்லையில் பிடிபடுபவர்களை திருப்பி அனுப்புவது தொடர்ந்தாலும், ஒட்டு மொத்தமாக ஒரு கோடி பேரை திருப்பி அனுப்புவது சாத்தியமில்லாத்து என்று அனைத்து கட்சியினரும் ஒத்துக்கொள்கின்றனர்.
ஒபாமாவின் சபதம்:
இப்படி எல்லை கடந்து வந்தவர்கள் பெரும்பான்மையோர் மெக்சிகோ மற்றும் அதற்கு கீழே உள்ள மத்திய - தென் அமெரிக்காவை சார்ந்த லத்தீன் இன மக்களே ஆவார். லத்தீன் இன மக்களின் வாக்கு வங்கி முழுவதும் கடந்த தேர்தலில் ஒபாமாவுக்கு கிடைத்த்து. சட்டபூர்வமற்ற ஒரு கோடி லத்தீன் இனமக்களை அமெரிக்காவில் நிரந்தரமாக தங்குவதற்கு ஏற்ற சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பேன் என்று சபதம் செய்திருந்தார் ஒபாமா. அதைத் தொடர்ந்து, அமெரிக்க செனட் சபையில் ஒருங்கிணைந்த குடியேற்ற சீர்திருத்த மசோதா சமர்பிக்கப்பட்டு, சட்ட- நீதிக் கமிட்டி ஒப்புதல் அளித்து, சபையிலும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. செனட் சபையில் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி மெஜாரிட்டி என்பதால் எந்த சிக்கலும் இல்லை.
குடியரசுக்கட்சியினர் ஏற்படுத்தும் சிக்கல்:
குடியரசுக் கட்சியினர் பெரும்பான்மையினராக உள்ள, காங்கிரஸ் சபையில் தீர்மானம் நிறைவேறுவது கடினமாக உள்ளது. குடியரசுக்கட்சியினரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் தீர்மானம் திருத்தம் செய்யப்படவேண்டும் என்று இருகட்சியிலும் நடுநிலையாளர்கள் முயற்சி எடுத்து வருகிறார்கள். எல்லையை முழுமையாக சீல் வைக்காமல், குடியேற்ற உரிமை வழங்கக்கூடாது என்பது குடியரசுக் கட்சியினரின் முக்கிய கோரிக்கையாகும். அதை தீர்மானத்தில் சேர்த்துக்கொள்ள இரு கட்சியை சார்ந்த செனட்டர்கள் முடிவு செய்துள்ளனர். இது நிறைவேறும் பட்சத்தில் அமெரிக்க - மெக்சிகோ எல்லை முழுவதும் தடுப்புக் கம்பி - சுவர் எழுப்படும். அதன் மூலம் மேற்கொண்டு எல்லையை க்ராஸ் செய்பவர்களை தடுத்து நிறுத்த முடியும் என நம்பப்படுகிறது.
இந்தியர்களுக்கும் பலன்:
ஒருங்கிணைந்த குடியேற்ற சீர்திருத்த மசோதா நிறைவேறும் போது, க்ரீன்கார்டு விண்ணப்பித்து காத்திருக்கும் ஒரு லட்சம் இந்தியர்களுக்கு உடனடியாக க்ரீன்கார்டுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. அதே போல், ஹெச்1பி விசாக்களின் எண்ணிக்கையும் மும்மடங்கு வரை அதிகரிக்க வகை செய்யப்பட்டுள்ளது. மேலும் விவசாயி தொழிலாளார்களுக்கென பிரத்தியேக விசா பிரிவு அறிமுகப்படுத்தப்படுகிறது. இதிலும் இந்தியர்கள் வேலைவாய்ப்பு பெற முடியும்.
க்ரீன் கார்டுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு:
இன்னும் க்ரீன்கார்டு விண்ணப்பிக்க முடியாத நிலையில் இருக்கும் சுமார் ஒரு லட்சம் பேரும் உடனடியாக விண்ணப்பிக வாய்ப்பு கிடைக்கும். அதாவது, விண்ணப்பிதற்கான கட் ஆஃப் தேதி மாற்றி அமைக்கப்படும். செனட் சபையில் இந்த மாத இறுதிக்குள் நிறைவேற்ற வேண்டும் என்று மெஜாரிட்டி லீடர் ரீட் கெடு விதித்துள்ளார். 100 ல் 70 பேராவது ஆதரித்தால், காங்கிரஸ் சபையில் குடியரசுக்கட்சியினருக் பெரும் நெருக்கடி ஏற்படும். அதன் மூலம் தீர்மானம் வெற்றி பெறவும் வாய்ப்புள்ளது.
ஆவலுடன் இந்தியர்கள்:
தற்போதைய நிலவரப்படி, அமெரிக்க - மெக்சிகோ எல்லையை முற்றிலும் சீல் செய்ய ஒப்புக்கொண்டு, அதுவும் மசோதாவில் சேர்த்துக் கொள்ளப்பட்டால்தான், குடியேற்ற சீர்திருத்த மசோதா நிறைவேறும் வாய்ப்பு இருக்கிறது. இதில் தங்களது க்ரீன்கார்டு கனவுகளும் சம்மந்தப்பட்டிருப்பதால் ஒரு லட்சத்திற்கும் மேலான இந்தியர்கள் நகத்தை கடித்தபடியே, தீர்மானம் வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டிருக்கின்றனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !