மத்திய பிரதேச மாநிலம் தாதியா மாவட்டத்தில் புகழ் பெற்ற ரதன்கர் மாதா கோவில் உள்ளது. சிந்து நதிக்கரையின் ஓரத்தில் மிகவும் அடர்ந்த காட்டுக்குள் உள்ளது.
ராம்புரா கிராமத்தில் இருந்து இந்த அம்மன் கோவிலுக்கு செல்ல வேண்டுமானால் சிந்து நதி மீது கட்டப்பட்டுள்ள பெரிய பாலத்தை கடந்துதான் செல்ல வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி மற்றும் தீபாவளிக்கு மறுநாள் நடக்கும் விழாக்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து ரதன்கர் மாதாவை வழிபட்டு செல்வார்கள்.
நவராத்திரி பண்டிகையின் 9–வது நாளான மகா நவமி தினமான நேற்று அந்த கோவிலில் சுமார் 5 லட்சம் பக்தர்கள் திரண்டிருந்தனர். மக்கள் அதிக அளவில் இருந்ததால், சிந்து நதி மீது கட்டப்பட்டிருந்த பாலத்தில் மக்கள் வரிசையாக விடப்பட்டனர்.
மக்கள் நெரிசலுக்கிடையே அந்த பாலத்தில் டிராக்டர்களில் வந்த மக்களும் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அப்போது அங்கு வந்த ஒரு குழுவினர், நீண்ட வரிசையில் நிற்க பொறுமை இல்லாமல் ‘‘பாலம் இடிந்து விழுகிறது. ஓடுங்கள்.... ஓடுங்கள்...’’ என்றனர். இந்த வதந்தியால் பாலத்தில் நடந்தும், டிராக்டர்களிலும் சென்று கொண்டிருந்த பக்தர்களிடம் பதற்றம் ஏற்பட்டது.
பக்தர்கள் பாலத்தின் இரு பக்கம் சிதறி ஓட தொடங்கினார்கள். அப்படி ஓடும் போதே பாலம் இடிந்து விட்டதாக அலறியபடி ஓடினார்கள். இதனால் அடுத்த சில நிமிடங்களில் பொய்யான வதந்தியால் அந்த பாலம் பகுதியில் கடும் நெரிசல் ஏற்பட்டது.
பக்தர்கள் ஒருவரை ஒருவர் நெருக்கி தள்ளியபடி அலறினார்கள். அந்த சமயத்தில் பக்தர்களின் நெரிசலை கட்டுப்படுத்த பொலிசார் தடியடி நடத்தினார்கள். இது பாலத்தில் இருந்த சுமார் 25 ஆயிரம் பக்தர்களிடையே மேலும் நெரிசலை அதிகரித்தது.
வயதான பெண்களும், சிறுவர்–சிறுமிகளும் கூட்ட நெரிசலில் சிக்கி கீழே விழுந்தனர். அவர்களால் எழுந்திருக்க முடியாதபடி மற்றவர்கள் மிதித்து சென்றனர். இதற்கிடையே நெரிசலில் இருந்து தப்பிக்க பலர் சிந்து நதியில் குதித்தனர்.
நேற்று சிந்து நதியில் தண்ணீர் கரை புரண்டோடியது. அந்த வெள்ளத்தில் பலரும் அடித்து செல்லப்பட்டனர்.
நெரிசலில் சிக்கி 31 பெண்கள், 17 சிறுவர் – சிறுமியர் உள்பட 115 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு மீட்புக்குழுவினர் விரைந்தனர்.
குவாலியர், தாதியா உற்பட பல நகரங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள், மருத்துவ குழுக்களும் விரைந்து சென்றன. ஆனால் கடும் நெரிசல் காரணமாக மீட்புக் குழுவினரால் பாலம் அருகில் கூட செல்ல முடியவில்லை. இதனால் உயிருக்குப் போராடி கொண்டிருந்தவர்களை மீட்க பல மணி நேரம் ஆனது.
இதற்கிடையே பொலிசார் தடியடி நடத்தியதால்தான் நெரிசல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனால் கடும் கோபம் அடைந்த பக்தர்கள் பொலிசார் மீது கற்களை வீசித் தாக்கினார்கள். இதையடுத்து பக்தர்களை பொலிசார் தடியடி நடத்தி விரட்டினார்கள்.
பாலத்தில் நெரிசல் ஏற்பட்ட பகுதியில் பலியாகிக் கிடந்த மக்களின் உடல் ஆங்காங்கே கிடந்தது. அவற்றை பொலிசார் ஒரே இடத்தில் குவியல் போல அடுக்கினார்கள். சில உடல்களை பொலிசார் தூக்கி சிந்து நதி தண்ணீரில் வீசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ரதன்கர் மாதா கோவிலில் ஏற்பட்ட வதந்தி மற்றும் உயிரிழப்பு குறித்து நீதி விசாரணை நடத்த மத்திய பிரதேச முதல்–மந்திரி சிவ் ராஜ்சிங் சவுகான் உத்தர விட்டுள்ளார்.
பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1.5 லட்சமும் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிர மும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 25 ஆயிரமும் இழப்பீடு தொகை தேர்தல் கமிஷனின் அனுமதி பெற்று வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !