பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நேரிட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 350ஆக உயர்ந்துள்ளது. மேலும் சாவு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்த நிலநடுக்கத்தினால் 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிலநடுக்கத்தின் காரணமாக பாகிஸ்தானின் தெற்கு கடற்கரைப் பகுதியில் இருந்து 1.5 கி.மீ தூரத்தில் கடலினுள் ஒரு பகுதி ஒரு தீவு போல உருவாகியுள்ளதாக பாகிஸ்தானின் தேசிய கடலியல் நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஆஸிஃப் இனாம் தெரிவித்துள்ளார்.
அந்நாட்டின் உள்துறைச் செயலாளர் அஸாத் கிலானி, "ரிக்டர் அளவுகோலில் 7.7ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் 350 பேர் உயிரிழந்தனர். 400 பேர் காயமடைந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கி மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மிகுதியான தூரம் மற்றும் சரியான பாதைகள் இல்லாத காரணத்தால் பலுசிஸ்தானில் மீட்புப் பணிகள் மேற்கொள்வது தாமதப்பட்டுள்ளது' என்று கூறினார்.
பலுசிஸ்தான் முதல்வர் அப்துல் மாலிக் பலுச், ஆவரன் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். 1000க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் பல மீட்புக் குழுவினர் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் அந்நாட்டு ராணுவத்தினர் தெரிவித்தனர்.
கட்டடங்களின் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட பெருவாரியான மக்களுக்கு ராணுவத்தினர் மற்றும் மருத்துவர்கள் முதலுதவி அளித்து வருகின்றனர். பள்ளிகள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் உள்பட ஏராளமான கட்டடங்கள் இடிந்துவிட்டதாக ஆவரன் மாவட்ட மக்கள் தெரிவித்தனர்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் ஆவரன் மாவட்டம் அதிக பாதிப்புக்குள்ளானதாகவும், 1000 கூடாரங்கள், உணவுப் பைகள், 15 ஆம்புலன்ஸ் வாகனங்களை அந்த மாவட்டத்துக்கு அனுப்பியுள்ளதாகவும் பலுசிஸ்தான் அரசு செய்தித் தொடர்பாளர் ஜேன் புலேதி பத்திரிகையாளர்களிடம் கூறினார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !