கென்யாவின் தலைநகர் நைரோபியில் உள்ள வணிக வளாகத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 39 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆப்பிரிக்க நாடான கென்யா தலைநகர் நைரோபியில் 4 அடுக்கு மாடி வணிக வளாகம் உள்ளது. நேற்று மாலை இங்கு ஏராளமானோர்கள் தங்கள் குழந்தைகளுடன் சென்று பொருட்களை வாங்கி கொண்டிருந்தனர்.
அப்போது இந்த வணிக வளாகத்துக்குள் 10 க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் புகுந்தனர். அவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் உள்ளே வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினார்கள். தீவிரவாதிகள் தாங்கள் வைத்திருந்த ஏ.கே.47 ரக துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் பலியானோர் எண்ணிக்கை 39-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 150 பேர் காயம் அடைந்தனர்.
பலியானவர்களில் 2 பேர் இந்தியர்கள். அவர்களில் ஒருவர் 40 வயதான ஸ்ரீதர் நடராஜன், 8 வயது சிறுவன் பரம்சு ஜெயின் அடங்குவர். மேலும் 4 இந்தியர்கள் காயம் அடைந்தனர்.
இவர்கள் தவிர பிரான்சை சேர்ந்த 2 பெண்களும், பலியாகி உள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி ஹோலண்டே கூறியுள்ளார். இந்த துப்பாக்கி சூட்டில் அமெரிக்கர்கள் காயம் அடைந்துள்ளனர்.
வேறு தகவல் எதுவும் வெளியாகவில்லை. துப்பாக்கிசூடு நடத்திய தீவிரவாதிகள் பொதுமக்களை கொன்று குவித்தது மட்டுமின்றி பலரை பிணைக் கைதிகளாகவும் பிடித்தனர். இவர்களில் முஸ்லிம்களை மட்டும் அடையாளம் அறிந்து அவர்களை விடுவித்தனர். மற்றவர்களை தொடர்ந்து பிணைக் கைதிகளாக வைத்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு சோமாலியாவில் இயங்கும் அல்-ஷபாப் என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது. இதற்கும் அல்-கொய்தா தீவிரவாத இயக்கத்துக்கும் தொடர்பு உள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டில் சோமாலியாவுக்குள் கென்யா இராணுவம் புகுந்து தீவிரவாதிகளை தாக்கியது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இத்தாக்குதல் நடந்ததாக அந்த இயக்கம் அறிவித்துள்ளது.
மேலும் தொடர்ந்து கென்யாவில் பல தாக்குதல்கள் நடத்த இருப்பதாகவும் மிரட்டல் விடுத்துள்ளது.
எனவே அல்-ஷபாப் தீவிராவதிகளுடன் சமரச பேச்சு நடத்த கென்யா அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஆனால் பேச்சுவார்த்தைக்கு தாங்கள் தயாராக இல்லை என தீவிரவாதிகள் அறிவித்துள்ளனர்.
இதற்கிடையே நைரோபியில் துப்பாக்கி சூடு நடந்த வணிக வளாகத்துக்குள் 2 இராணுவ சிறப்பு படை வீரர்கள் புகுந்துள்ளனர். பொலிசாரும், இராணுவமும் வணிக வளாகத்தை சுற்றி முற்றுகையிட்டுள்ளனர். வணிக வளாகத்தின் மீது ஹெலிகாப்டர்கள் வட்டமிட்டப்படி தீவிரவாதிகளை நோட்டமிட்டு வருகிறது.
வணிக வளாகத்திற்குள் புகுந்த இராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று இரவு உள்ளேயிருந்து காயம் அடைந்த இராணுவ வீரர் ஒருவரை ஆம்புலன்ஸ் மூலம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததை நேரில் பார்த்ததாக ஒருவர் தெரிவித்தார்.
இதற்கிடையே வணிக வளாகத்திற்குள் தீவிரவாதிகளின் பிடியில் பிணைக் கைதிகளாக இருப்பவர்களின் நிலை என்ன என தெரியவில்லை.
மேலும் இந்த தாக்குதல் மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்தியது போன்று உள்ளதாக கருதப்படுகிறது. அங்கும் தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வீசிவிட்டு அதன் பின்னர்தான் ஏ.கே.47 ரக துப்பாக்கியால் பொதுமக்களை சுட்டனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !