பல்வேறு கொலை மற்றும் கற்பழிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்ட ஜெய்சங்கர் பாதுகாப்பு அதிகம் உள்ள பெங்களூர் மத்திய சிறையில் இருந்து தப்பியோடிவிட்டான்.
சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே உள்ள பனங்காட்டூரைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகன் ஜெய்சங்கர் என்ற சங்கர் (36). லாரி டிரைவரான அவனுக்கு பரமேஸ்வரி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். போதை பழக்கம், சூதாட்டம் மற்றும் பல பெண்களுடன் தொடர்பிருந்த அவன் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களாக பார்த்து கற்பழித்து, கொலை செய்து நகைகளை திருடி வந்தான்.
அவன் தமிழகம் தவிர கர்நாடகத்திலும் இது போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வந்தான். இதையடுத்து கடந்த 2011ம் ஆண்டில் அவன் தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டான். அந்த ஆண்டு மார்ச் மாதம் 18ம் தேதி அவனை தர்மபுரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கோவை சிறையில் இருந்து அழைத்துச் சென்றனர். அப்போது அவன் சேலம் பேருந்து நிலையத்தில் சிறுநீர் கழிக்கச் செல்வதாகக் கூறி தப்பியோடிவிட்டான்.
இதையடுத்து கர்நாடக மாநிலத்திற்கு சென்ற அவன் சித்ரதுர்கா மற்றும் தும்கூரைச் சேர்ந்த 8 பேரை கொலை செய்தான், 6 பெண்களை கற்பழித்தான். இத்தனை குற்றங்களையும் அவன் ஒரே மாதத்தில் செய்தான்.
2011ம் ஆண்டு மே மாதம் 4ம் தேதி பிஜப்பூர் மாவட்டம் ஏளகி கிராமத்தில் உள்ள ஒரு பெண்ணை அவன் கற்பழிக்க முயன்றான். அப்போது கிராமத்தினர் அவனைப் பிடித்து அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து அவனை கர்நாடக போலீசார் கைது செய்து பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்தனர். அவன் மீது 3 மாநிலங்களில் சுமார் 30 கற்பழிப்பு மற்றும் கொலை வழக்குகள் உள்ளன. கடந்த 2011ம் ஆண்டில் இருந்து அவன் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வந்தான். இந்நிலையில் அவன் சிறையில் இருந்து தப்பியோடிவிட்டான்.
நாட்டிலேயே மிகவும் பாதுகாப்பான சிறை என்று கூறப்படும் பரப்பன அக்ரஹாராவில் இருந்து ஜெய்சங்கர் தப்பியோடிவிட்டான். முன்னதாக கடந்த சனிக்கிழமை அவன் தும்கூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அன்று மாலையே மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டான். அதன் பிறகு சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அவனுக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அவனை அவனது அறையில் அடைத்தனர். அவனுடன் போரே கௌடா என்ற கைதி இருந்தார். நேற்று அதிகாலை சிறை அதிகாரிகள் ஒவ்வொரு அறையாக பார்வையிட்டபோது ஜெய்சங்கர் தப்பியோடியது தெரிய வந்தது. முன்னதாக சனிக்கிழமை இரவு 12.30 மணி வரை அவன் தன்னுடன் பேசிக் கொண்டிருந்ததாகவும், அதன் பிறகு தான் தூங்கிவிட்டதாகவும் போரே கௌடா தெரிவித்தார்.
இது குறித்து சிறைத்துறை ஏடிஜிபி கே.வி. ககன்தீப் கூறுகையில், ஜெய்சங்கர் அதிகாலை 2 மணி முதல் 4 மணிக்குள்ளாக போலிச் சாவி வைத்து அறைக் கதவை திறந்து சென்றிருக்க வேண்டும். அவன் வளாகத்தில் கட்டுமானப் பணிக்காக வைக்கப்பட்டிருந்த இரும்பி கம்பியை எடுத்து சுவரைத் தாண்டியுள்ளான்.
அவன் மருத்துவமனையில் இருந்து 3 ஜோடி கையுறைகளை திருடியுள்ளான். அவன் தப்பியோடிய பிறகு துணை எஸ்.பி., 2 ஜெயிலர்கள், தலைமை வார்டன் உள்பட 11 சிறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
ஜெய்சங்கர் தப்பியோடிவிட்டதை அடுத்து கர்நாடகம் மற்றும் தமிழக போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !