விஜயின் ‘தலைவா’ திரைப்படத்தை கொழும்பில் திரையிடுவது தொடர்பில் இதுவரை தீர்மானம் எதனையும் மேற்கொள்ளவில்லையென இலங்கைத் தேசியத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் அசோக சேரசிங்க தெரிவித்தார்.
மேற்படித் திரைப்படத்தை இலங்கையில் திரையிடுவதில் சிக்கல் நிலவுவதாக வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
‘தலைவா’ திரைப்படத்தை இலங்கையில் மற்ற மாகாணங்களில் வெளியிடுவதில் எவ்வித சிக்கலும் இல்லையெனவும் ஆனால் கொழும்பில் திரையிடுவது குறித்து தொடர்ந்தும் கலந்துரையாடி வருவதாக சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் விரைவில் தீர்மானமொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் அதுவரை எதனையும் உறுதியாகக் கூறமுடியாது எனவும் அசோக சேரசிங்க குறிப்பிட்டார். இதேவேளை இலங்கை தணிக்கைச் சபையின் தலைவர் காமினி சுமனசேகரவிடம் இது தொடர்பில் நாம் வினவியபோது முதலில் இலங்கைத் தேசியத் திரைப்படக் கூட்டுத்தாபனமே முடிவெடுக்க வேண்டுமெனவும் அதன் பின்னரே திரைப்படம் குறித்து தாம் பரிசீலிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழகத்தில் தயாரிக்கப்படும் திரைப்படங்களை இலங்கையில் திரையிட தடை விதிக்கப்பட வேண்டும் என்று ராவண சக்தி அமைப்பு அரசாங்கத்திடம் கோரியிருந்தது.
ரஜனிகாந்த், கமலஹாசன், விஜய் போன்ற நடிகர்கள் இலங்கைக்கு எதிராக செயற்பட்டு வருவதாகக் கூறி அவர்களின் திரைப்படங்களை இலங்கையில் திரையிட அனுமதிக்கக் கூடாது எனக் கூறி அவ்வமைப்பு இலங்கை தணிக்கை சபையிடம் மனுவொன்றையும் கையளித்திருந்தது.
இத் திரைப்படங்களை இலங்கை திரையரங்குகள் திரையிட்டால் அத் திரையரங்குகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவ்வமைப்பு எச்சரித்திருந்து.
இதே காலப்பகுதியிலேயே இந்தியாவில் பௌத்த பிக்குகள் தாக்கப்பட்டமையும், தமிழகத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் விளையாட எதிர்ப்பு கிளம்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !