ஒன்பது வயது பெண் பிள்ளையின் தந்தையொருவர் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை நேற்று வெள்ளிக்கிழமை தாக்கல் செய்துள்ளார்.
சட்டத்திற்கு முரணான, எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை தவிர்த்துக்கொள்ளவும், அவற்றை சட்ட வரையறைக்குள் நடத்த வழிவகுத்துக்கொடுக்கவும் பொலிஸாருக்கும் ஏனைய பிரதிவாதிகளுக்கும் உயர் நீதிமன்றம் அறிவுறுத்த வேண்டும் என்றே தனது அடிப்படை உரிமை மீறல் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை சனத்குமார அத்துகோரளவும் அவரது மகள் சத்மா மெத்சதியுமே தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் சட்டமா அதிபரும் உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகளுகம் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். தனது மகளை ஜூலை 3 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு கொழும்பு-7 இலுள்ள மோஸஸ் கல்லூரியிலிருந்து அழைத்துவர சென்ற போது ஆர்ப்பாட்ட ஊர்வலம் காரணமாக ஏற்பட்ட வாகன நெருக்கடியினால் உரிய நேரத்திற்கு பாடசாலைக்கு செல்ல முடியாது போனது. பொலிஸார் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதனையும் எடுக்காது வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தனர் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தான் பாடசாலைக்கு சென்றபோது தனது மகள் அதிர்ச்சியடைந்து பரிதவித்து தன்நிலையை இழந்து கதைக்க தொடங்கினார் என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
பிரதிவாதிகளான பொலிஸ் அதிகாரிகளின் செயல்கள், செயலின்மைகள், தீர்மானங்கள் மற்றும் சட்டத்திற்கு முன் சமத்துவம், தான் விரும்பிய இடங்களுக்கு செல்வதற்கான சுதந்திரம் எனும் தனது அடிப்படை உரிமைகளை மீறியது எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இதற்கு நட்டஈடாக ஒரு மில்லியன் ரூபாவை தரவேண்டும் என்றும் மனுதாரர் கோரியுள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !