விஜய் படங்களின் மிகப்பெரிய சந்தைகளில் கேரளாவும் ஒன்று. வேற்றுமொழி நடிகர்களில் கேரளாவில் அதிக ரசிகர்களை கொண்டவர் என்று விஜய்யை அங்குள்ள மீடியாக்கள் குறிப்பிடுகின்றன. தலைவா அவரின் முந்தைய சாதனைகளை தாண்டிச் செல்லும் என்ற நம்பிக்கை அங்குள்ளது. ஆனால் ரம்ஜானுக்கு படம் வெளியாவது எதிர்பாராத நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் ஓணத்தை அடுத்து மிகப்பெரிய பண்டிகை ரம்ஜான். ரம்ஜான் நோன்பு நேரத்தில் சிங்கம் 2 வெளியானது. கேரளா அதிகம் எதிர்பார்த்த தமிழ்ப் படங்களில் சிங்கம் 2 முக்கியமானது. காரணம் சிங்கம் அங்கு பெரிய வெற்றியை பெற்றிருந்தது. படத்தை ப்ரமோட் செய்ய சூர்யா கொச்சின் வந்தார்.
முதல் பத்து தினங்களில் கேரளாவில் சிங்கம் 2, 3.5 கோடிகள் வசூலித்தது. கிட்டத்தட்ட 150 திரையரங்குகளில் கிடைத்த வசூல் இது. விநியோகஸ்தர்கள் எதிர்பார்த்த வசூலைவிட இது குறைவு. ரம்ஜான் நோன்பு காரணமாக மலபார் பகுதியில் படம் சரியாக ஓடவில்லை, அது வசூலில் பிரதிபலித்தது. கேரளா பாக்ஸ் ஆபிஸில் மலபாருக்கு முக்கிய இடம் உண்டு. மொத்த வசூலில் நாற்பது சதவீதம் அந்தப் பகுதியில் இருந்துதான் கிடைக்கிறது.
தலைவா ரம்ஜானுக்கு வெளியாகிறது. அதேநாள் மலையாளத்தில் நான்கு முக்கிய படங்கள் வெளியாகின்றன. மம்முட்டி நடிப்பில் ரஞ்சித் இயக்கியிருக்கும் கடல் கடந்நு ஒரு மாத்துக்குட்டி,
பிருத்விராஜ் நடித்திருக்கும் ஜீது ஜோசப்பின் மெமரிஸ், மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் நடிப்பில் சமீர் தஹிர் இயக்கியிருக்கும், நீலாகாசம் பச்சக்கடல் சுவந்நபூமி, குஞ்சாகாபோபனை வைத்து லால் ஜோஸ் இயக்கியிருக்கும், புள்ளிப்புலியும் ஆட்டின்குட்டியும். நான்குப் படங்களுமே முக்கியமானவை. அத்துடன் ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸும் வெளியாகிறது.
கேரளாவில் 500 க்கும் குறைவான திரையரங்குகளே உள்ளன. அதில் 150 க்கும் மேற்பட்டவை இரண்டாம், மூன்றாம்கட்ட ரிலீஸை நம்பியிருப்பவை. புதிய படங்களை திரையிடுபவை 300 லிருந்து 350 க்குள் இருக்கும். இந்த குறைவான திரையரங்குகளில்தான் தலைவா உள்ளிட்ட ஆறு திரைப்படங்களும் முட்டி மோதியாக வேண்டும்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !