தீவிரவாதிகளின் தாக்குதல் திட்டங்களை கண்டறிய மட்டுமே பிறநாடுகளின் இணையதள தகவலை வேவு பார்த்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க வர்த்தக நிறுவனங்களுக்கு சாதகமாக வெளிநாட்டு நிறுவனங்களின் தொழில் ரகசியங்கள் ஏதும் வேவு பார்க்கவில்லை என்றும் அமெரிக்கா புதிய விளக்கம் அளித்துள்ளது. தேசிய உளவு அமைப்பு மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து அமெரிக்க எம்.பிக்கள் குழு வாஷிங்டனில் விசாரணை நடத்தி வருகிறது. இந்த குழுவின் முன்பாக ஆஜரான தேசிய உளவு அமைப்பின் வழக்கறிஞர் இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளார்.
அமெரிக்கர்கள் மற்றும் இதர நாட்டு மக்களின் தொலைதொடர்பு உரையாடல்கள் எதுவும் தேசிய உளவு அமைப்பால் பதிவு செய்யப்படவில்லை என்று வழக்கறிஞர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இணையதள தகவல்களை வேவு பார்த்தது சட்டவிரோதம் அல்ல என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். அமெரிக்க பிரதிநிதிகள் சபை இதற்கு அனுமதி அளித்துள்ளதாக கூறிய அவர், பிரதிநிதிகள் சபை மற்றும் நீதிதுறை குழுக்கள் இதை கவனமாக கண்காணித்து வருவதாக கூறியுள்ளார்.
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் போது மக்களின் ரகசியங்களில் அத்துமீற கூடாது என அதிபர் ஒபாமா கூறியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளின் இணையதள தகவல்களை அமெரிக்கா வேவு பார்த்ததாக அமெரிக்க தேசிய உளவு அமைப்பு மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த விவரங்களை வெளியிட்ட அந்த அமைப்பின் முன்னாள் ஊழியர் எட்வர்ட் ஸ்னோடன் கைது நடவடிக்கைக்கு பயந்து ரஷ்யாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இந்நிலையில் வேவு பார்த்ததை நியாயப்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !