தர்மபுரி இளவரசன் உடலை மறு பிரேதப் பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அரசு மருத்துவமனையில் இந்த பரிசோதனை நடைபெறவுள்ளது.
டெல்லி அகில இந்திய விஞ்ஞான மருத்துவக் கழக மருத்துவர்கள் இந்த மறு பிரேதப் பரிசோதனையை செய்யவுள்ளனர். 3 பேர் கொண்ட குழு இதற்காக டெல்லியிலிருந்து வரவுள்ளது. தர்மபுரியில் மர்மமான முறையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார் இளவரசன். அவர் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினரும், கொலைசெய்யப்பட்டிருப்பதாக அவரது குடும்பத்தினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிட்டோர் கூறி வருகின்றனர். இதனால் இளவரசன் மரணம் மர்மமாகவே நீடிக்கிறது.
இந்த நிலையில் இளவரசன் உடலை மறு பிரேதப் பரிசோதனை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. ரமேஷ் என்பவர் இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தார். அதை விசாரித்த உயர்நீதிமன்றம் ஏற்கனவே செய்யப்பட்ட பிரேதப் பரிசோதனை வீடியோவைப் பார்த்தது. இதைத் தொடர்ந்து 2 டாக்டர்கள் கொண்ட குழுவை நியமித்து இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதன்படி, எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியின் தடயவியல் துறைத் தலைவர் டாக்டர்.கே. தங்கரஜ், போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி தடயவியல் துறைத் தலைவர் டாக்டர். பி.சம்பத்குமார் ஆகியோர் இளவரசனின் உடலை நேற்று ஆய்வு செய்தனர்.
இளவரசனின் உடலில் காயம் இருந்த பகுதிகளில் எக்ஸ்ரே எடுத்துப் பார்க்கப்பட்டது. மேலும் இளவரசன் பிணம் கிடந்த இடத்தையும் டாக்டர்கள் குழு ஆய்வு செய்தது. இதையடுத்து இன்று உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதைப் பரிசீலித்த நீதிபதிகள் தனபால், சி.டி.செல்வம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், மறு பிரேதப் பரிசோதனைக்கு உத்தரவிட்டனர். மறு பிரேதப் பரிசோதனை செய்யும் டாக்டர்களையும் உயர்நீதிமன்றமே அறிவிக்கவுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !