Headlines News :
Home » » யாழை குட்டி சிங்கப்பூராக மாற்ற மக்களின் ஆணைக்காக காத்திருக்கும் டக்ளஸ் தேவானந்தா.

யாழை குட்டி சிங்கப்பூராக மாற்ற மக்களின் ஆணைக்காக காத்திருக்கும் டக்ளஸ் தேவானந்தா.

Written By TamilDiscovery on Wednesday, July 3, 2013 | 11:54 PM

வடமாகாணசபை தேர்தலில் மக்கள் எமக்கு ஆணை வழங்கினால் மூன்றிலிருந்து ஐந்து வருடத்திற்குள் ஒரு குட்டி ஜப்பானாகவோ அல்லது குட்டி சிங்கப்பூராகவோ வட மாகாணத்தை மாற்றுவோம்.

இவ்வாறு பாரம்பரிய கைத்தொழில் சிறுகைத்தொழில் திறன் அபிவிருத்தி முயற்சிகள் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான கே. என். டக்ளஸ் தேவானந்தா கூறினார். காரைதீவு,பாலையடி, ஸ்ரீவாலவிக்னேஸ்வரர் ஆலய பரிபாலன சபையினரால் அமைச்சர் டக்ளஸின் சேவைகளைப் பாராட்டி கெளரவிக்கும் வைபவம் ஒன்று கடந்த செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது. ஆலய வளாகத்தில் நடைபெற்ற மேற்படி வைபவத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். காரைதீவு பாலையடி ஸ்ரீ வாலவிக்னேஸ்வரர் ஆலய புனருத்தாபன குழுத்தலைவர் இ. தவராசா தலைமையில் இவ் வைபவம் நடைபெற்றது. வைபவத்தில் ஆலய செயலாளர் அ. குமரநாதன் அமைச்சருக்கு வாழ்த்துப் பாடி கையளித்ததுடன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் தலைப்பாகை அணிவிக்க ஆலயத் தலைவர் இ. தங்கராசா பொன்னாடை போர்த்தி கெளரவித்தார்.

அதேவேளை, ஆலயம் சார்பில் அமைச்சருக்கு ஆலய பொருளாளர் சி. முத்துலிங்கம் ஈழத்து மக்கள் திலகம் எனும் பட்டத்தையும் வழங்கினார்.

இந்த வைபவத்தில் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் செல்லையா இராசையா,பனை அபிவிருத்தி அதிகார சபை தலைவர் பசுபதி சீவரத்தினம் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

இங்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்ந்து உரையாற்றுகையில்,

எனது கொள்கை ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்பது தான். அந்த வகையில் எங்கு எமக்கு வாய்ப்புக் கிடைக்கின்றதோ அங்கிருந்து மக்களுக்கான எம் சேவையை ஆரம்பிப்போம்.

தேவையுள்ள மக்களுக்கு நிச்சயம் உதவுவோம். அவர்களுக்கு பக்கபலமாக இருப்போமென்பதில் எவ்வித மாற்றமுமில்லை. எனவேதான் வட மாகாண சபை தேர்தலில் சரியானவர்களை தெரிவு செய்யுங்களென நாம் மக்களுக்கு சொல்லிவருகின்றோம். இந்த அடிப்படையில் வடக்கு மக்கள் எமக்கு அந்த ஆணையைக் கொடுத்தால் மூன்றிலிருந்து ஐந்து வருடங்களுக்குள் வட மாகாணத்தை செல்வம் கொழிக்கும், வளம் கொழிக்கும் மாகாணமாக மாற்றுவோம். அப்போது ஒரு குட்டி ஜப்பானாகவோ, குட்டி சிங்கப்பூராகவோ வட மாகாணம் மாறுமென்பதும் திண்ணமாகும். அதேவேளை, ஜனாதிபதியின் ஆசியுடன் உயர்பாதுகாப்பு வலயப் பகுதியில் கூட எமது மக்களை மீளக் குடியமர்த்த முடியுமென்ற நம்பிக்கையும் எமக்குண்டு.

எனினும், மக்கள் எம்முடனிருக்க வேண்டும். நாம் மக்களை விட்டு ஓடவோ, மக்களை படுகுழிக்குள் தள்ளவோ போவதில்லை. அவர்களது முதுகிலேறி சவாரி செய்ய முனையவும்மாட்டோம்.

எமது கொள்கை:

மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி எக்காலத்திலும் பிரிக்கப்பட முடியாத வடகிழக்கில் ஒரு அலகு என்பதே எம்கொள்கையெனக் கூறிவந்தோம்.வடக்கும் கிழக்கும் இணைய வேண்டுமா? பிரிய வேண்டுமா என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். எந்த விடயத்தை எப்படி அணுக வேண்டுமென்பது எமக்குத் தெரியும்.

எனவேதான் நீதிமன்ற ஏற்பாட்டின் மூலம் வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்ட போதும் நாம் மெளனமாகவே இருந்தோம். ஏனெனில், இணைப்பதற்கான வாய்ப்புகள் உண்டென்பது எமக்குத் தெரியும். வடக்கும் கிழக்கும் இன்று இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ள நிலையில் இணைப்பைத் தடுப்பதற்கு அரசு முயற்சியெடுக்கும். அதனால் அரசைப் பிழைகூற முடியாது.

எமது பலவீனத்தில் குறைப்பாடுகளிலிருந்து கொண்டுதான் நாம் குறை கூறுகின்றோம். இந்திய அரசாகவிருந்தாலும் சரி, இலங்கை அரசாகவிருந்தாலும் சரி தங்கள் நலனிலிருந்து கொண்டுதான் இவற்றைப் பார்க்கின்றன. எனவே நாம் தான் நமது நலன்களை முன்னிறுத்த வேண்டும்.

முதலைக்கண்ணீர்:-

13ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கூடாகத்தான் எமது பிரச்சினைக்கு தீர்வு காண முடியுமென்றும் இது அதற்கான ஆரம்பப்படியென்றும் நாம் சொல்லி வந்தோம். எம்மைத்தவிர எல்லோரும் இதற்குமாறுபட்ட கருத்தையே கூறிவந்தனர். சுயநல அரசியலுக்காக மக்களின் நரம்புகளை முறுக்கேற்றி இரத்தத்தை சூடாக்கிவிட்டு இன்று முதலைக்கண்ணீர் வடிப்பவர்கள் கூட அதனை உழுத்துப் போனது, சோரம் போனது எனக் கூறவும் தவறவில்லை.

நமது ஆயுதப் போராட்டத்தினால் கிடைத்த பொன்னான வாய்ப்பே இலங்கை- இந்திய ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தம் சரியாகப் பயன்படுத்தப்பட்டிருக்குமானால் இன்றைய நிலை வந்திருக்காது. எவ்வளவோ முன்னேற்றகரமாக இருந்திருக்க முடியும்.

நடந்தது நடந்துவிட்டது. சரி இனியாவது சரியான திசையில் செல்வோமென்றால் அப்படியுமில்லை. ஆனால், வெளிநாடுகள் பார்க்கிறது, கூர்மையாகப் பார்க்கிறது கிட்ட வந்து பார்க்கிறது என்றெல்லாம் அரசியலில் பல கதைகளையும் கூற அவர்கள் முற்படுகின்றனர். நம்பிரச்சினைக்கு நாமே தீர்வுகாண வேண்டும்.

பத்திரிகைகள்.

பத்திரிகைகளில் எனக்கு நம்பிக்கையில்லை. சவப்பெட்டிக் கடைகள் போன்றே அவை உள்ளன. தமிழ் ஊடகங்களும் இதே நிலையிலேயேயுள்ளன.

சரியான வழிகாட்டலை மக்களுக்கு காட்டுவதற்குப் பத்திரிகைகள் தயாரில்லை. வியாபார விளம்பர நோக்கிலேயே அவையுள்ளன என்றும் அவர் கூறினார்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template