நடிகர் பரத் தற்போது சன்னி லியோனுடன் ஹிந்தி படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதற்காக ஹிந்தி கற்கும் முயற்சியில் இறங்கியுள்ளாராம்.
'பாய்ஸ்' படத்தில் ஷங்கர் மூலம் அறிமுகமாகி, தொடர்ந்து காதல், பட்டியல், எம் மகன், வெயில், பழனி, சேவல், அரவாண் என 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் பரத். இவர் நடித்துள்ள கில்லாடி, 555 ஆகிய படங்கள் வெளியாகவிருக்கின்றன. இந்தநிலையில் இவருக்கு ஒரு ஹிந்திப் படத்தில் நடிக்க அழைப்பு வந்து உடனடியாக படப்பிடிப்பும் தொடங்கிவிட்டது. இந்த வாய்ப்பு குறித்து பரத் கூறுகையில்,
"ஒவ்வொருவருக்கும் ஹிந்திப் படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். சிலருக்கு கனவாக கூட இருக்கும். ஏனென்றால் ஹிந்தி மார்கெட் அவ்வளவு பெரியது. ஹிந்தியில் நடித்துவிட்டால் இப்போது உலகப் புகழ் கிடைத்து விடுகிறது. நான் இது பற்றி சிந்தித்ததில்லை. நாமெல்லாம் எங்கே நடிக்க போகிறோம் என்று இருந்தேன். ஒரு நாள் எனக்கு ஒரு அழைப்பு வந்தது. தாங்கள் '555' படத்தின் ஸ்டில்கள்,விளம்பரங்களை பார்த்ததாகவும் பிடித்து இருந்ததாகவும் உடனடியாக மும்பை வரமுடியுமா என்றும் கேட்டார்கள்.
மும்பை போனேன்.அவர்களுக்கு பிடித்து விட்டது. அதுதான் 'ஜாக்பாட்' படம் எனக்கு இந்த படவாய்ப்பே ஒரு ஜாக்பாட் வாய்ப்பு போலதான். இரண்டே நாளில் முடிவாகிவிட்டது. ஜாக்பாட் படத்தை தயாரிப்பது வைக்கிங் மீடியா என் டர்டெய்ன்மெண்ட் நிறுவனம். இயக்குவது கெய்சாத் குஸ்தாத். இவர் அமெரிக்காவில் சினிமா படித்தவர். பாம்பே பாய்ஸ், பூம் போன்ற படங்களை இயக்கியவர். கத்ரினா கய்ப்பை அறிமுகம் செய்தவரே இவர்தான்.
படத்துக்கு ஒளிப்பதிவு ஆர்த்தர் சுராவ்ஸ்கி. இவர் போலந்துகாரர். ஹாலிவுட், ஈரானிய, கொரியன் படங்களில் பணியாற்றியவர்.இந்தப் படத்துக்கு 7 பேர் இசை அமைக்கிறார்கள். இது ஒரு நகைச்சுவை த்ரில்லர். படத்தில் நான், சச்சின் ஜோஷி, நஸ்ருதீன் ஷா, சன்னி லியோன் நான்கு பேர் முக்கிய கதாபாத்திரங்கள். எங்களைச் சுற்றித்தான் கதை நிகழும். நான்கு பெரும் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் ஏமாற்றிக் கொள்ளை அடிப்போம். நான் பாண்டிசேரியிலிருந்து கோவா போய் தங்கிவிட்ட தமிழ்ப் பையனாக நடிக்கிறேன். அங்குள்ள கேஸினோ, எனப்படும் கேளிக்கை விடுதியில் வேலை பார்ப்பேன். இந்தக் கதை கோவா, மும்பை என இரண்டு நகரங்களிலும் நடக்கும்.
இதில் நடிக்கும் நடிகர்களில் இளையவன் நான்தான். இருந்தாலும் தமிழ் திரையுலகின் மீதுள்ள மரியாதையால் என்னை அன்பாக நடத்துகிறார்", என்றார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !