இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு வருத்தம் தெரிவித்து அரச தரப்பில் வெளியிடப்பட்ட விளம்பரத்தில் சோனியாவின் சிரித்த முகத்தை வைத்த செய்தி ஒளிபரப்புதுறை உயர் அதிகாரிகள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த மாதம் தொடர்ந்து மூன்று நாட்கள் கனமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். 4 ஆயிரம் பேர் வரை காணாமல் போய் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இவர்கள் அனைவரும் வரும் 15ம் திகதிக்கு பின்னர் இறந்தவர்களாக கருதப்படுவர் என இந்திய அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் உத்தரகாண்ட அரசு சார்பாக பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிடப்பட்டது. இந்த விளம்பரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா உத்தரகாண்ட் முதல்வர் விஜய்பகுகுணாவின் சிரித்த படம் வெளியிடப்பட்டிருந்தது. வருத்தம் தெரிவிக்கும் விளம்பரத்தில் சோனியாவின் சிரித்த முகம் இருப்பது முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. கடும் கோபம் அடைந்த விஜய்பகுகுணா, உடனடியாக செய்தி ஒளிபரப்பு துறை செயலாளர் எம்.எச்.கான் மற்றும் இயக்குனர் ஜெனரல் வினோத் சர்மாவை வரவழைத்து விளக்கம் கேட்டார். அவர்களது பதில் திருப்தி அளிக்காததை தொடர்ந்து இருவரும் உடனடியாக தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
இனிமேல் வெளியிடப்படும் விளம்பரங்கள் அனைத்தும் முதல்வர் அலுவலகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !