மாஜி மனைவியை கடத்தி சென்று 9 நாட்கள் வீட்டுக்குள் பூட்டி வைத்து 100 இடங்களில் பிளேடால் வெட்டி சித்ரவதை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆசாமியின் பெயர் பாஜு உஜமான் அக்பர் பாட்சா(23). இவனது தந்தை 1993ம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர். பாட்சா மீது 16 கிரிமினல் வழக்குகள் பதிவாகியுள்ளன. 9ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டான். சிவ்ரியில் உள்ள ஆதாம்ஜி ஜிவாஜி சாலில் இவனது வீடு உள்ளது.
பிப்ரவரி மாதம் பேஸ்புக் இணைய தளம் மூலம் பாட்சாவுக்கு சரிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. தான் பட்டதாரி என்றும், இறக்குமதி, ஏற்றுமதி தொழில் பார்ப்பதாகவும் பொய் சொல்லி சரிதாவை பாட்சா மயக்கினான். இருவரும் சில வாரங்களிலேயே காதலர்களாக மாறியதுடன் பாந்த்ரா கோர்ட்டில் திருமணமும் செய்தனர். புதுமணத் தம்பதியினர் பின்னர் சிவ்ரியில் பாட்சா வீட்டில் தங்கினர்.
சில நாட்களிலேயே மதத்தின் பேரால் சரிதாவை பாட்சா இழிவுபடுத்த தொடங்கினான். பட்டதாரி என்று சொன்னதும், ஏற்றுமதி இறக்குமதி தொழில் பார்ப்பதாகவும் பாட்சா கூறியதும் பொய் என்று சரிதாவுக்கு தெரியவந்தது. பாட்சாவின் சித்ரவதைகள் சரிதாவுடன் நிற்கவில்லை. அவருடைய குடும்பத்தினருக்கும் பரவியது. இந்த சித்ரவதைகளை தொடர்ந்து ஏப்ரல் மாதம் 14ம் தேதி சரிதா முலுண்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதனால் கணவன் மனைவி இடையே மேலும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மே மாதம் 29ம் தேதி இருவரும் விவாகரத்து செய்தனர். ஆனால் இந்த விவாகரத்து இதுவரையில் கோர்ட்டில் உறுதி செய்யப்படவில்லை. இதன் பின்னரும் பாட்சாவின் தொல்லைகள் தொடர்ந்தன. இதனால் ஜூன் 16ம் தேதி பாட்சாவுக்கு எதிராக சரிதா இரண்டாவது முறையாக போலீசில் புகார் செய்தார். ஜூன் 17ம் தேதி சரிதாவை பாட்சா சிவ்ரிக்கு கடத்தி சென்று பல நாட்கள் வீட்டில் பூட்டி வைத்து சித்ரவதை செய்தான். முதலில் கையால் குத்தியும் காலால் உதைத்தும் சித்ரவதை செய்தான். அவனது கையில் பிளேடு ஒன்று சிக்கியது. அந்த பிளேடால் அவன் மிருகத்தனமாக சரிதாவை தாக்கினான்.
கைகள், கால்கள், முகம் என உடல் முழுவதும் பிளேடால் வெட்டினான். உடலில் 100க்கும் அதிகமான இடங்களில் வெட்டு காயங்கள் காணப்பட்டன. வேதனையால் சரிதா அலறித் துடித்தாள். இதனால் பயந்து போன பாட்சா அவளை பக்கத்தில் உள்ள கிளினிக்கிற்கு அழைத்து சென்றான். சரிதா தற்கொலை செய்ய முயன்றதுபோல நாடகமாடினான். இதற்காக சரிதாவின் உடலில் ஏற்பட்ட காயங்களை தனது செல்போனில் படம் பிடித்தான். பின்னர் இந்த படத்தை சரிதாவின் குடும்பத்தினருக்கு அனுப்பினான். கூடவே சரிதா அனுப்பியது போல ஒரு எஸ்.எம்.எஸ்.செய்தியும் அனுப்பினான். அதில், இந்த செல்போன் நம்பரில் தொடர்பு கொள்ள முயற்சிக்க வேண்டாம். இந்த படங்களை அண்ணனுக்கு காண்பிக்க வேண்டாம். உங்கள் எல்லோர் மீதும் எனக்கு அன்பு உள்ளது. எனது உயிரை மாய்க்கிறேன். குட் பை என்று குறிப்பிட்டிருந்தான். சரிதாவை கொலை செய்துவிட்டு தற்கொலை என்று கூற பாட்சா திட்டமிட்டிருந்திருக்க வேண்டும். அதனால் தான் இப்படி ஒரு எஸ்.எம்.எஸ்.சை அனுப்பியிருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகின்றனர்.
இதனிடையே கிளினிக்கில் சிகிச்சை முடிந்ததும் சரிதாவை மீண்டும் தன் வீட்டுக்கு அழைத்து சென்ற பாட்சா சித்ரவதைகளை தொடர்ந்தான். இதனிடையே ஒருநாள் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பாட்சாவின் பிடியில் இருந்து சரிதா தப்பி சென்றார். இம்மாதம் 3ம் தேதி வக்கீலின் உதவியோடு போலீசில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் பாட்சாவை கைது செய்து நேற்று முன்தினம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவனை 14ம் தேதி வரையில் போலீஸ் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !