160 ஆண்டு கால பழைமையான இந்தியாவின் தந்தி சேவை நேற்றுடன் முடிவுக்கு வந்தது.
இந்தியாவில் பரீட்சார்த்த முறையில் 1850ம் ஆண்டு கொல்கத்தாவில் முதன் முதலாக தந்தி சேவை தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் பிரிட்டிஷாரின் கிழக்கிந்திய கம்பெனியார் மட்டுமே பயன்படுத்தி வந்த தந்தி சேவை 1854ம் ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. அன்று முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்கள் பிறப்பு, இறப்பு உள்ளிட்ட அவசர செய்திகளை பல்லாயிரக்கணக்கான மைல் தொலைவில் உள்ள தங்களின் உறவினர்களுக்கு தந்தி மூலமாகவே பரிமாறி வந்தனர்.
கையடக்கத் தொலைபேசி, மின்னஞ்சல் போன்ற நவீன வசதிகள் பெருகிவிட்டதால் தந்தி சேவையின் முக்கியத்துவம் மக்களிடையே சிறுகச்சிறுக குறையத் ஆரம்பித்தது. இதன் விளைவாக, ஆண்டுதோறும் 100 கோடி ரூபாய் தந்தி துறையின் நிர்வாக செலவினங்களுக்காக அரசு ஒதுக்கி வந்த போதிலும் வருமானம் 75 கோடிக்கும் குறைவாகவே இருந்தது.
இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள 75 தந்தி அலுவலகங்களை மூடிவிட தொலைத் தொடர்பு துறை அமைச்சகம் முடிவு செய்தது. இதனையடுத்து, 160 ஆண்டுகால பழமை வாய்ந்த இந்திய தந்தி சேவை நேற்றிரவு 11.45 மணியுடன் நிறைவடைந்தது. இதற்கு முன்னதாக தங்களது சுக - துக்கங்களை தந்தி மூலம் பரிமாறியவர்களும், இதற்கு முன்னர் வரை தந்தியே அனுப்பவில்லையே என்ற ஆதங்கத்தில் இருந்தவர்களும் நேற்று காலை முதல் டெல்லி, மும்பை, பெங்களூர், சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள தந்தி அலுவலகங்களில் குவியத் தொடங்கினர்.
இதன்படி இந்தியா முழுவதும் நேற்று மட்டும் 2 ஆயிரத்து 197 பேர் தந்திகளை அனுப்பியுள்ளனர். இதன் மூலம் தந்தி துறைக்கு கடைசி நாள் வருமானமாக 68 ஆயிரத்து 837 இந்திய ரூபாய்கள் கிடைத்தது.
இவர்களில் பலர் ´ஊழலை ஒழிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்´ என்ற வாசகங்களுடன் பிரதமர் மன்மோகன் சிங்கின் அதிகாரபூர்வ டெல்லி இல்லத்திற்கு தந்திகளை அனுப்பினர். கடைசி தந்தியை நேற்றிரவு 11.45 மணிக்கு டெல்லி ஜன்பத் தந்தி நிலையத்தில் இருந்து அஷ்வனி மிஷ்ரா என்பவர், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியின் முகவரிக்கு அனுப்பி வைத்தார்.
இத்துடன் 160 ஆண்டு கால பழமையான இந்திய தந்தி சேவை நிறைவடைந்தது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !