எதிர்வரும் வடமேல் மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவை களம் இறக்கும் முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவர் சரத் பொன்சேகாவே அதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுடன் இணைந்து தான் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக அண்மையில் அவர் பகிரங்கமாக அறிவித்திருந்தார். இதன் பின்புலத்தில் தற்போது வடமேல் மாகாண சபைத் தேர்தலில் பொன்சேகா கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக சந்திரிக்கா போட்டியிடவுள்ளதாக குறித்த இணையத்தள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் அவருக்கு இருக்கும் ஆதரவுத் தளம் மற்றும் வடமேல் மாகாணத்தில் வசிக்கும் அதிகளவான இராணுவத்தினரின் ஆதரவு என்பவற்றைக் கொண்டு மாகாண சபை நிர்வாகத்தை கைப்பற்றும் வியூகத்தில் பொன்சேகா இறங்கியுள்ளதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் இது தொடர்பில் சந்திரிக்காவிடம் இருந்து இதுவரை எதுவித பதிலும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !