Headlines News :
Home » » எகிப்து இஸ்லாமியவாத ஜனாதிபதி முர்ஸியின் ஆட்சி கவிழ்ப்பு சரியானதா?

எகிப்து இஸ்லாமியவாத ஜனாதிபதி முர்ஸியின் ஆட்சி கவிழ்ப்பு சரியானதா?

Written By TamilDiscovery on Sunday, July 28, 2013 | 6:41 AM

இஸ்லாமியவாத ஜனாதிபதி முகமது முர்ஸியிடம் இருந்து இராணுவம் பதவியைப் பறித்ததை அடுத்து எகிப்து மீண்டும் கொந்தளித்துவருகிறது.

முப்பது ஆண்டுகளாக எகிப்தை தனது இரும்புப் பிடிக்குள் வைத்திருந்த ஹோஸ்னி முபாரக் மக்கள் எழுச்சியினால் தூக்கியெறியப்பட்டிருந்தார்.

அங்கு ஜனநாயக முறையில் முஸ்லிம் சகோதரத்த்துவக் கட்சியின் முகமது முர்ஸி ஆட்சிக்கு வந்து ஒரு ஆண்டே ஆகியிருக்கும் நிலையில், மறுபடியும் வன்முறையும் அதைத் தொடர்ந்து இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பும் நடந்துள்ளது. இஸ்லாமியவாத ஜானதிபதியாக இருந்த முகமது முர்ஸி ஆட்சிக்கு வந்து கொஞ்ச நாளிலேயே நாட்டின் முக்கிய கட்டமைப்புகளுக்கும் சமூகத்தின் முக்கிய பிரிவுகளுக்கும் அவர் வேண்டாதவராக ஆகிப்போனார்.

நாட்டின் பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளை சமாளிக்க முர்ஸி போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று பலரும் கருதினர்.

முர்ஸியின் இஸ்லாமியவாத ஆதரவாளர்களுக்கும், இடதுசாரிகள், தராளவாத ஆதரவாளர்கள், மதச்சார்பின்மைவாதிகள் போன்றோர் அடங்கிய முர்ஸி எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் என நாடு பிளவுபட்டுப்போனது. முர்ஸி ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு ஆண்டு கடந்த ஜூன் 30ஆம் திகதியன்று பூர்த்தியானபோது, அவரது ஆட்சிக்கு அதிருப்தி தெரிவிக்கும் முகமான தமரொட் என்ற கிளர்ச்சி இயக்கம் மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது.

பெரும் எண்ணிக்கையில் மக்கள் திரண்டு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஜூலை முதலாம் திகதி நாட்டின் இராணுவம் ஜனாதிபதிக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்தது. மக்களுடைய முக்கிய கோரிக்கைகள் அடுத்த இரண்டு நாட்களில் நிறைவேற்றப்படாவிட்டால், இராணுவம் தலையிட்டு, தனது பாதையில் வகுக்கும் என்று அது எச்சரித்திருந்தது. இராணுவம் விதித்த காலக்கெடு நெருங்கிக்கொண்டிருக்க, நாட்டின் நியாயமான தலைவன் நானே என்று முர்ஸி வலியுறுத்தினார். பலத்தைக் கொண்டு தன்னைப் பதவியகற்றினால் நாடு குழப்பத்திலும் கொந்தளிப்பிலும் மூழ்கும் என்று அவர் எச்சரித்திருந்தார்.

இருந்தாலும் ஜூலை மூன்றாம் திகதி நாட்டின் ஆயுதப் படைகளின் தலைவர் ஜெனரல் அப்துல் ஃபதா அல் சிஸ்ஸி, நாட்டின் அரசியல் சாசனம் இடைநிறுத்தி வைக்கப்படுவதாகவும், நாட்டின் தலைமை நீதிபதி அத்லி மன்சூர் தலைமையில், துறைசார் நிபுணர்களால் தற்காலிக அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது என்றும், நாட்டில் அடுத்த அதிபர் தேர்தலும் பாராளுமன்றத் தேர்தலும் நடக்கும்வரை நாட்டை இந்த இடைக்கால அரசு நிர்வகிக்கும் என்றும் அறிவித்திருந்தார்.

முகமது முர்ஸி பதவி நீக்கப்பட்டதற்கு நாட்டின் செல்வாக்கு மிக்க பிரமுகர்கள் பலரின் ஒப்புதல் கிடைத்திருந்தது. எகிப்தின் அதியுயர் இஸ்லாமிய மதபீடமான அல் அஸாரின் தலைமை மதகுருவும், காப்டிக் கிறிஸ்தவ திருச்சபையின் தலைவரும், முன்னணி எதிர்க்கட்சிப் பிரமுகரான முகமது எல் பராதெய், கடும்போக்கு சலாஃபி நூர் கட்சியினர் போன்றோரும் முர்ஸியின் பதவி நீக்கத்தை ஆதரித்திருந்தனர்.

பதவிநீக்கப்பட்டதிலிருந்து முகமது முர்ஸி ரகசியமான ஒரு இடத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். இஸ்லாமிய சகோதரத்துவக் கட்சியின் மூத்த புள்ளிகள் பலரும்கூட தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தலைநகரின் முக்கிய இடங்களை இராணுவத் துருப்புகள் கவச வாகனங்கள் சகிதம் முற்றுகையிட்டுள்ளன. லட்சக்கணக்கான முர்ஸி ஆதரவாளர்கள் ஒருபுறமும் முர்ஸி எதிர்ப்பாளர்கள் மறுபுறமும் என வீதிகளில் கூடிவருகின்றனர். அந்த ஆர்ப்பாட்டங்களின்போது மோதல்கள் வெடிக்க வன்முறையில் பலர் உயிரிழந்து வருகின்றனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template