கனடா நாட்டிற்கு அழைத்து செல்வதாக, 210 இலங்கை தமிழர்களிடம், 2.10 கோடி இந்திய ரூபாய் வரை வசூல் செய்து விட்டு, தப்பி ஓட முயன்ற பெண்ணை, பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்கள், ஆத்தூர் நீதிமன்றத்தில் சுற்றி வளைத்தனர்.
ஆத்தூர் அடுத்த, நாகியம்பட்டி கிராமத்தில், இலங்கை தமிழர் முகாம் உள்ளது. இங்குள்ள இலங்கைநாதன் (எ) சிவலிங்கம், அவரது மனைவி அன்றன்ரெஜினா ஆகியோர், முகாமில் உள்ள கவிதா, 35, யாழினி, 28, நிர்மலா, 25, சசிகலா, 38, ஆனந்த், 27, உள்பட ஆறு பேரிடம், கனடா நாட்டிற்கு அழைத்து செல்வதாக கூறி, தலா, 1.50 லட்சம் ரூபாய் வீதம் வசூல் செய்தனர். அதேபோல், தாரமங்கலம், கோவை, கும்முடிப்பூண்டி, வேலூர், செந்தாரப்பட்டி போன்ற இடங்களில் உள்ள இலங்கை தமிழர் முகாமில், 210 பேரிடம், 2.10 கோடி இந்திய ரூபாய் வரை வசூல் செய்துள்ளனர்.
கடந்த, 2011ல், 200 இலங்கை தமிழர்களை, ஆந்திர மாநில கடற்கரை தென்னந்தோப்பில் தங்க வைத்திருந்த போது, 200 பேரை கைது செய்த பொலிஸார், அவர்களை முகாம்களுக்கு அனுப்பி வைத்தனர். இலங்கை தமிழர்களை வெளிநாட்டிற்கு அழைத்து செல்ல முயன்ற இலங்கைநாதனை, மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில், இலங்கை தமிழர்களிடம் வசூல் செய்த தொகையை, மாதம், 20 ஆயிரம் ரூபாய் வீதம் தருவதாக, இலங்கைநாதன் மனைவி அன்றன்ரெஜினா, சில மாதங்களுக்கு முன், தம்மம்பட்டி போலீஸாரிடம், எழுதி கொடுத்தார். அதன் பின், பணம் தராமல் தலைமறைவாக இருந்தார்.இந்நிலையில், அன்றன்ரெஜினா, அவரது தோழி உள்பட, நான்கு பேர், வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக நேற்று, ஆத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு வந்தனர்.
தகவலறிந்த, நாகியம்பட்டி இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த கவிதா, யாழினி, நிர்மலா உள்ளிட்டோர், நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த அன்றன்ரெஜினாவை முற்றுகையிட்டு, பணம் கேட்டனர். அப்போது, அன்றன்ரெஜினாவுடன் வந்தவர்கள், தகராறில் ஈடுப்பட்டதால், பாதிக்கப்பட்ட பெண்கள், கற்களை வீசி தாக்க முயன்றனர். அதனால், இரு பெண்களும், நீதிமன்றத்துக்குள் ஓட்டம் பிடித்தனர். தகவலறிந்த ஆத்தூர் பொலிஸ் பொறுப்பதிகாரி சம்பத் உள்ளிட்ட பொலிஸார், பணம் பறிகொடுத்தவர்கள் மற்றும் அன்றன்ரெஜினா ஆகியோரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, அன்றன்ரெஜினா கூறியதாவது:
ஜெயபாலன் என்பவர், வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்வதாக கூறி, எங்களிடம் பணம் வாங்கினார். அவரை காணதததால், பணத்தை பெற்று தரமுடியவில்லை, எனக் கூறினார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !