தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூர் அருகே சோமங்கலம் பகுதியில் சுரங்கப் பாதையொன்று கண்டுபிடிப்பட்டுள்ளது.
தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூர் அருகே சோமங்கலம் தட்டார் தெருவை சேர்ந்தவர் சங்கர் (40). இவர் மெக்கானிக் கடை வைத்துள்ளார்.
இவரது மனைவி சுமதி. இரு மகள்கள் உள்ளனர். இவரது வீட்டுக்கு அருகே காலிமனை உள்ளது. நேற்று காலை அந்த இடத்தில் புதிதாக வீடு கட்ட 3 அடி அகலம், 5 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டினர். மாலை 5 மணியளவில் ஒரு இடத்தில் இரண்டரை அடி ஆழத்தில் கல் மீது கடப்பாரை இடிக்கும் சத்தம் கேட்டது. அதை எடுத்தபோது சுரங்கப்பாதை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உள்ளே ஒரு ஆள் செல்லும் அளவுக்கு பாதையும், ஒரு இரகசிய அறையும் இருந்தது. இதுகுறித்து சோமங்கலம் பொலிசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பொலிசார் விரைந்து வந்து அந்த இடத்தை பாதுகாப்புடன் மூடி வைத்தனர்.
பின்னர் மாமல்லபுரம் தொல்லியல் துறை, ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார், வருவாய்த் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்பகுதியினர் கூறுகையில், தோண்டப்பட்ட இடத்திலிருந்து 300 மீட்டர் தொலைவில் சோமநாதீஸ்வரர் கோயில் உள்ளது. அந்த கோயில் 1500 ஆண்டுகள் பழமையானது என கூறப்படுகிறது. இந்த கோயிலிலும் சுரங்கப் பாதை சில ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கோயிலிலிருந்து பல்வேறு வழிகளில் சுரங்கப்பாதைகள் சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.
அதில் ஒன்று இதுவாக இருக்கலாம் என்றனர். தொல்லியல் துறையினர் வந்து ஆய்வு செய்தால்தான் அந்த சுரங்கப்பாதையில் புதையல் ஏதாவது இருக்கிறதா அல்லது அது எங்கு செல்கிறது என்பது குறித்து தெரியவரும்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சோமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து பார்வையிட்டு சென்றனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !