மட்டக்களப்பில் முஸ்லிம் பெண்ணைப் போன்று அபாயாவை அணிந்து தனியார் வாகனம் ஒன்றில் தப்பிச் செல்ல முயன்ற சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஓட்டமாவடி காவத்தமுனை பகுதியில் இருந்து கல்முனைப் பகுதிக்கு தப்பிச் சென்றுக்கொண்டிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பிறைந்துரைச்சேனைப் பகுதியில் கடந்த 5ம் திகதி மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த வாழைச்சேனை பிறைந்துரைச்சேனை 2ம் குறுக்கு வீதியைச் சேர்ந்த நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை பிறைந்துறைச்சேனை பகுதியில் கடந்த 5ம்திகதி இரவு இடம்பெற்ற கோஸ்டி மோதலில் இரண்டு இளைஞர்கள் கத்தி குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்திருந்தனர். இதனையடுத்து அப்பகுதியில் கைக்குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில் குறித்த நபரை பொலிஸார் தேடி வந்துள்ளனர். இந்நிலையில், குறித்த சந்தேகநபர் முஸ்லிம் பெண்கள் அணியும் அபாயாவை அணிந்து கொண்டு முஸ்லிம் பெண் போன்ற வேடத்தில் தனியார் வாகனம் ஒன்றில் தப்பிச் செல்வதாக பொலிஸாருக்குக் தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்தே குறித்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இவர், கடந்த 2006ம் ஆண்டு தொடக்கம் 2008ம் ஆண்டு வரை ஊர்காவல் படையனியில் நாவலடி, வெலிகந்த போன்ற இராணுவ முகாம்களில் கடமையாற்றி பின்னர் கடமையை விட்டுவிலகியிருந்தார்.
அத்துடன் பிறைந்துரைச்சேனைப் பகுதியில் இடம்பெற்ற கைக்குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு சந்தேக நபர்களை தேடிவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !