இலங்கை மின்சார சபையின் தலைவரான டபிள்யு. பி கணேகல தற்போதும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பணடாரநாயக்க குமாரதுங்கவுடன் தொடர்புகளைப் பேணி வருகிறாரோ என்று ஜனாதிபதி சிரித்தவாறு கேள்வி எழுப்பினார்.
கடந்த வெள்ளிக்கிழமை அலரிமாளிகையில் இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதம ஆசிரியர்களுடனான சந்திப்பின் போதே இச் சம்பவம் நிகழ்ந்தது.
அப்போது அங்கு ஊடகத்துறை சார்ந்த ஒருவரால் ஜனாதிபதியிடம் ஒரு விடயம் சுட்டிக்காட்டப்பட்டது. "ஜனாதிபதி அவர்களே! இலங்கை மின்சார சபை தொடர்பான செய்திகளைப் பெற்றுக் கொள்வது கடினமாக உள்ளதே” என ஊடகத்துறையைச் சார்ந்த ஒருவரால் கேள்வி ஒன்று எழுப்பப்பட்டது.
உடனடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஜனாதிபதி. "கணேகலவே, ஊடகவியலாளர்கள் பிரச்சினை ஒன்றைக் கிளப்பியுள்ளார்கள். இதற்கு நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டும். எனவே உடனடியாக அலரிமாளிக்கைக்கு வாருங்கள்” என தெரிவித்துள்ளார்.
அதற்குப் பதிலளித்த இலங்கை மின்சார சபையின் தலைவரான டபிள்யு. பி கணேகல, "சரி மேடம். நான் வருகிறேன்” (ரைட் மேடம் மம என்னம்) என பதிலளித்துள்ளார்.
அவர் தன்னை அழைத்த விதம் குறித்து அதிர்ந்து போன ஜனாதிபதி, "ஐயையோ இன்னும் மேடம்தானா?” (அனே..அனே.. தவம மேடம் நேத) மேடத்தைச் சந்திக்கவல்ல இப்போது வந்து என்னைச் சந்திக்கவும் (மேடம் ஹம்புவன்ன நெவய் தன்ம எவித் மாவ ஹம்புவன்ன) என ஜனாதிபதி தெரிவித்துள்ளார் இதன் போது பெரும் சிரிப்பொலி ஏற்பட்டது.
பின்னர் தேநீர் பறிமாற்றம் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது, கணேகலவிடம் ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
"என்னுடன் நீங்கள் பேசுவதற்கு முன்னர் மேடமுடன் பேசியிருந்தால் அந்த நினைவில் என்னையும் நீங்கள் மேடம் என நினைத்துப் பேசியிருக்கலாம்” என ஒரு போடு போட்டுள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !