மானிப்பாய் பிரதேசத்தில் காணமால்போனதாகத் தெரிவிக்கப்பட்ட குடும்பஸ்தரை பொலிஸாரே வெள்ளைவானில் அழைத்துச் சென்றுள்ளனர் எனவும் குறித்த நபரை கொள்ளைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய விசாரணைகளுக்காக சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸார் அழைத்துச் சென்றுள்ளனர் எனவும் யாழ். பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம். முகமட் ஜிப்ரி தெரிவித்தார்.
யாழ்.பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவ் விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்தவாரம் வடமராட்சி அல்வாய் பகுதியில் நள்ளிரவு வேளையில் முகத்தைக் கறுப்புத் துணியினால் மூடிமறைத்துக் கொண்டு இனந்தெரியாத நபர்கள் வீடு ஒன்றிற்குள் புகுந்து அங்கிருந்த பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மானிப்பாயில் வசிக்கின்ற குடும்பஸ்தர் ஒருவரை நெல்லியடிப் பொலிஸார் விசாரணைகளுக்காக வெள்ளைவானில் அழைத்துச் சென்றுள்ளனர்.
பொலிஸாருடைய வாகனம் பழுதடைந்த நிலையில் இருந்தமையினால் பொலிஸார் வெள்ளைவானில் சென்று குறித்த நபரை அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த நபருக்கும் அக் கொள்ளைச் சம்பவத்திற்கும் தொடர்பில்லை என்ற விடயம் தெரியவந்துள்ளது. இதனால் குறித்த குடும்பஸ்தரை விடுதலை செய்துள்ளோம் என்றார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !