செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பும் விண்கலம் அடுத்த
மாதம் விண்ணில் ஏவப்படவுள்ளது என இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழக உயர்
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழக (இஸ்ரோ) செயற்கைகோள் மைய இயக்குனர்
சிவகுமார், இந்திய தொலை உணர்வு செயற்கைகோள் திட்ட இயக்குனர் மயில்சாமி
அண்ணாத்துரை, ‘மார்ஸ்’ திட்ட இயக்குனர் அருணன் ஆகியோர் பெங்களூரில் உள்ள
இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தில் நேற்று கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி
அளித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:
‘முதல்முறையாக இந்தியா வேற்று கிரகத்துக்கு அதாவது செவ்வாய் கிரகத்துக்கு
விண்கலத்தை அனுப்பவுள்ளது. இது இந்தியாவின் அறிவியல் ஆராய்ச்சியில் ஒரு
மைல் கல் ஆகும். இந்த விண்கலம் சுமார் 1,340 கிலோ எடை கொண்டது.
அதில் எடுத்து செல்லப்படும் 5 விஞ்ஞான ஆய்வு கருவிகளின் எடை 15 கிலோ ஆகும்.
உயிர் வாழ்க்கைக்கு அடிப்படையானது மீத்தேன் வாயு. எனவே செவ்வாய்
கிரகத்தில் மீத்தேன் வாயு உள்ளதா? இல்லையா? இருந்தால் எங்கெங்கு உள்ளது?
அவை எங்கிருந்து வருகிறது என்பன போன்றவற்றை கண்டறிவதற்காக இந்த விண்கலம்
அனுப்பப்படுகிறது.
பூமியில் இருந்து புறப்படும் இந்த விண்கலம் சுமார் 9 மாதம் பயணம் மேற்கொண்டு செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்ட பாதையை சென்றடையும்.
இது அவுஸ்திரேலியாவில் தெரியும். இந்த விண்கலத்தில் உள்ள ஆய்வு கருவிகள்
மூலம் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு, கனிமங்கள், வளிமண்டலம், மீத்தேன்
வாயு உள்ளிட்டவை குறித்து ஆராய்ச்சி செய்யப்படும்.
செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையை அடைந்த பிறகு அங்கிருந்து சுமார்
272 கிலோ மீட்டர் அருகிலும், 80 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிலும் நீள்வட்ட
பாதையில் விண்கலம் சுற்றி வரும். மின்சாரம், தகவல் தொடர்பு, விண்வெளி
பயணம், விண்ணில் செலுத்தும் முறை என்று ஒவ்வொன்றிலும் புதுமையான
தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு உள்ளது.
பல நாடுகள் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பி உள்ளது. நாமும் அதுபோல்
அனுப்புவது விண்வெளி தொழில்நுட்பத்தில் இந்திய தற்சார்பை
வெளிப்படுத்துவதற்கு தான்.
இந்த திட்டத்துக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 21-ம் திகதி ஒப்புதல்
அளிக்கப்பட்டது. ஒரு ஆண்டில் திட்டத்தை வகுத்து வடிவமைத்து விண்ணில்
செலுத்தும் நிலைக்கு கொண்டு வந்து உள்ளோம்.
குறுகிய காலத்தில் தொலை தூர பயணத்துக்கான முயற்சியாக இது
மேற்கொள்ளப்பட்டது. திட்டப்பணிகள் அனைத்தும் இறுதிக்கட்டத்தை எட்டி தயார்
நிலையில் உள்ளது. அனைத்து பரிசோதனைகளும் முடிக்கப்பட்டு வருகிற 27-ம் திகதி
விண்கலம் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்துக்கு கொண்டு செல்லப்படும்.
அடுத்த மாதம் (அக்டோபர்) 21-ம் திகதியில் இருந்து நவம்பர் 19-ம்
திகதிக்குள் ஏதாவது ஒருநாளில் வானிலையை பொறுத்து விண்கலம் விண்ணில்
செலுத்தப்படும்.
எதிர்காலத்தில் வேற்று கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்பும் திட்டத்துக்கு
இது முன்னோடி திட்டமாக இருக்கும். இது மிகப்பெரிய சவாலான திட்டம். இந்த
விண்கலம் விண்ணுக்கு சென்று திரும்ப வராது. செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம்
அனுப்பும் திட்டத்துக்கான மொத்த செலவு ரூ.450 கோடி (இந்திய ரூபாய்).
அதில் விண்கலத்தை எடுத்து செல்லும் பி.எஸ்.எல்.வி-சி25 ராக்கெட்டுக்கான செலவு ரூ.110 கோடி. விண்கலத்துக்கான செலவு ரூ.150 கோடி.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !