11 நாள் சர்ச்சைக்குப் பிறகு தலைவா வெளியாகியிருக்கிறது. பொதுவாக வெள்ளிக்கிழமைதான் படங்கள் வெளியாகும். வார இறுதி என்பதால் இரசிகர்கள் கூட்டமும் திரையரங்கில் நிறைந்து வழியும்.
பிரச்சினையில் சிக்கிய படத்துக்கு ராகும் கேதும் ஏது? தலைவா நேற்று செவ்வாய்க்கிழமை வெளியானது. ஞாயிறு முன் பதிவு தொடங்கினாலும் சென்னையின் முக்கிய திரையரங்குகளில் டிக்கெட் கிடைக்கவே செய்தது.
முதலில் அரங்கு நிறைந்தது ஆல்பர்ட் திரையரங்கில். ரஜினியின் படம் என்றால் அது ஆல்பர்ட்டில்தான் வெளியாகும். ரஜினியின் மகள்கள் முன்பு இந்த திரையரங்கில்தான் தங்கள் தந்தையின் படத்தை முதல் காட்சி பார்ப்பார்கள். ரஜினி நாலு வருஷத்துக்கு ஒரு படம் என்று சுருங்கிய பிறகு ஆல்பர்ட் திரையரங்கு முன்னுரிமை தருவது விஜய் படங்களுக்கு.
வழமைக்கு மாறாக தலைவா வெளியான திரையரங்குகளில் பொலிஸாரின் கண்காணிப்பு அதிகமிருந்தது. சென்னை புறநகரில் உள்ள குமரன் திரையரங்கில் விஜய்யின் பேனருக்கு பீர் அபிஷேகம் செய்ய முயன்ற விஜய் இரசிகரை பொலிஸ் பொதுமக்கள் முன்னிலையில் அடித்து இழுத்துச் சென்றுள்ளனர். நூறு ரூபாய் பெறாத டிக்கெட்டுக்கு நூற்றைம்பது ரூபாய் வசூலிக்கும் திரையரங்குக்கு பாதுகாப்பு அளிக்கும் பொலிஸ் இரசிகர்களை தீவிரவாதிகளைப் போல் அடித்து இழுத்துச் செல்வது என்ன நியாயம் என்று படம் பார்க்க வந்த இரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.
சர்ச்சைக்குப் பிறகு வெளியாகியிருக்கும் தலைவாவுக்கு துப்பாக்கி அளவுக்கு வரவேற்பில்லை. அதேநேரம் வேறு மாநிலங்களில் வெளியாகி, திருட்டு டிவிடி மற்றும் இணையத்தில் வெளியான பிறகும் தலைவாவுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு அவ்வளவு மோசமும் இல்லை.
வரும் நாட்களில் வெகுஜனங்களை தலைவா எவ்வளவு தூரம் கவர்கிறது என்பதைப் பொறுத்தே அதன் வெற்றியை சொல்ல முடியும்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !