மத்திய பிரதேசத்தில் பரவிய வதந்தியை நம்பி முன்கூட்டியே தீபாவளியை கொண்டாடிய மக்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு நவம்பர் 22ம் திகதி வருகிறது. அதற்கு இன்னும் 2 1/2 மாதங்கள் இருக்கும் நிலையில் மத்திய பிரதேச மாநிலம் பேதுல் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் முன்கூட்டியே பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளனர்.
40க்கும் மேற்பட்ட கிராமங்களில் இதுபோல் பட்டாசு வெடித்து கடந்த 4ம் திகதி கொண்டாடிவிட்டனர்.
அந்த மாவட்டத்தில் உள்ள 40 கிராமங்களில் அன்றைய தினம் தீபாவளி விற்பனை சூடுபிடித்தது. வேலையில்லாமல் இருந்தவர்கள் பட்டாசு மற்றும் தீபாவளி பொருட்கள் விற்பனை கடைகள் வைத்து பணம் சம்பாதித்தார்கள். கோவிலுக்கு செல்லும் ஜீப்கள், வேன்களில் கூட்டம் அலைமோதியது. இதனை அறிந்த பக்கத்து மாவட்ட மக்கள் ஆச்சரியம் அடைந்தனர். ஏன் முன்கூட்டியே தீபாவளி கொண்டாடினீர்கள் என்று கேட்டதற்கு அந்தப் பகுதியில் விசித்திரமான வதந்தி பரவியதே காரணம் என்று தெரியவந்ததுள்ளது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது கடும் மழை பெய்யும். இதனால் பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாட முடியாமல் போய்விடும். தீபாவளி கொண்டாடா விட்டால் தலைப்பிள்ளைக்கு ஆபத்து, வீட்டில் துன்பம் ஏற்படும். இதை தவிர்க்க வேண்டுமானால் முன்கூட்டியே தீபாவளி கொண்டாட வேண்டும் என்றும் 3 முறை கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும் எனவும் வதந்தி பரவியது. இதைக் கேட்டதும் கிராம மக்கள் உடனே பட்டாசு வெடித்தும், கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியும் தீபாவளியை கொண்டாடியதால் கிராமங்கள் களை கட்டியுள்ளது. இது குறித்து மகேந்திரவாடி கிராம பஞ்சாயத்து தலைவியின் கணவர் நரேந்திரா கூறுகையில், எனது கிராமத்தில் மக்கள் கடந்த 4ம் திகதி தீபாவளி கொண்டாடினார்கள். தொடர்ந்து 15 நாட்களுக்கு விழா கொண்டாடப்பட்டது.
ஒவ்வொரு குடும்பத்தினரும் தீபாவளி இனிப்பு பலகாரங்கள் செய்து விருந்தளித்தனர். தீபாவளியையொட்டி சல்கான்பூரில் உள்ள புகழ்பெற்ற கோவிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம். முன்கூட்டியே தீபாவளி கொண்டாடியதால் வேன், ஜீப், டிரைவர்கள் வழக்கத்தை விட கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி ஒரு நடைக்கு ரூ.3,000 முதல் 3,500 வரை சம்பாதித்தனர். எனவே இந்த வதந்தியை டிரைவர்களும், வியாபாரிகளும் கிளப்பி விட்டிருக்கலாம் என கருதுகிறேன் என்றார்.
அதே சமயம் சில கிராமங்களில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும் தீபாவளி கொண்டாடினார்கள்.
மேலும் கிராம அதிகாரிகள் கூறுகையில், படிப்பறிவில்லாத கிராம மக்கள் மூடப்பழக்கத்தால், வதந்தியை நம்பி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். ஆனால் யாருமே வதந்தியை வதந்தி என்று நம்பாமல் உண்மை என்று நம்புகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !