இலங்கையில் இனமோதல் இனி ஒரு கதை கிடையாது எனவும் இப்போது அபிவிருத்திதான் கதை எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட 30 ஆண்டுகால உள்நாட்டு போர் பிரச்சார பரிமாணத்தில் வீழ்ந்துள்ளதை ஜனாதிபதி மஹிந்த மன வருத்தத்துடன் ஒப்புக் கொண்டுள்ளார்.
அது ஒரு மோசமான இழப்பு எனவும் ஜனாதிபதி ஒப்புக் கொண்டுள்ளார்.
6 சதவீதம் தங்களால் காப்பாற்றிக் கொள்ள முடியும் எனவும் ஏனையவை விவசாயம், சுற்றுலா மீன்பிடி, உற்பத்தி சேவைகள் வளர்ச்சியில் தங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
சமாதானம் இல்லாமல் அபிவிருத்தி இல்லை. அபிவிருத்தி இல்லாமல் சமாதானம் இல்லை. ஆனால் சமாதானமே சாதனை என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
"யுத்த காலத்தில் ஒவ்வொரு நாளும் மோதல் நேரத்தில் சடலம் மீட்கப்படும். சிலவேளைகளில் அதிக சடலங்கள் மீட்கப்படும். சடலமாக மீட்கப்பட்ட அனைத்து இளைஞர்களும் புலிகளால் பலவந்தமாக யுத்தத்தில் ஈடுபடுத்தப்பட்டவர்கள். படையில் இருந்த சிங்களவர்களும் உயிர்விட்டனர். சிவில் மக்கள் கொல்லப்பட்டனர். இவை அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன" என ஜனாதிபதி மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.
"பிரபாகரன் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவர். அவருக்கு கொலைகள் மகிழ்ச்சியாக இருந்தன. அவர் தனது சொந்த மக்களையும் உறவுகளையும் கொன்றார்´ என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
புலிகள் தங்களுக்கு எதிராக மாற்றுக் கருத்துக்களை கொண்ட தமிழ் தலைவர்களை கொன்றதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.
"தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு காலத்தில் சக்திவாய்ந்த அமைப்பாக காணப்பட்டனர். அவர்கள் வசம் இராணுவம், கடற்படை, சிறிய விமானப்படை இருந்தது. இவை அல்-கொய்தா அமைப்பிடம் கூட இருந்ததில்லை" என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை இராணுவம் தெரிந்தே அல்லது வேண்டுமென்றே பொது மக்களை கொன்றதாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார்.
"இதுபோன்ற யுத்தத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான யுத்தத்தில் நாங்கள் பொது மக்களை கொன்றிருந்தால் பொது மக்கள் எங்கள் பக்கம் வந்திருக்க மாட்டார்கள். ஆனால் 3 லட்சம் பொது மக்கள் எமது பக்கம் வந்தனர். புலிகளிடம் இருந்து அவர்கள் தப்பிக்க முயன்ற போது புலிகள் அவர்களை சுட்டனர்" என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
"புலிகள் இயக்க ஆதரவாளர்களின் வலையமைப்பு நீண்டகால வணிகத்தில் ஈடுபட்டுள்ளது. மிகப்பெரிய பணம் திரட்டும் வலையமைப்பாக அது இருந்தது. அவர்கள் இன்றும் அதனை செய்கின்றனர். அவர்கள் சேகரிக்கும் பணம் இன்று புலிகளுக்கு செல்கிறதா அல்லது அவர்களது பிரச்சாரங்களுக்கு செல்கிறதா என தெரியவில்லை" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேற்குலகில் அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் வழங்க புலி ஆதரவு வலையமைப்பு பணத்தை பயன்படுத்துவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !