
திடக்கழிவுகளிலிருந்து மெல்லிய பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்தெடுப்பதை ஊக்குவிக்கும் பொருட்டு முதலாம் திகதி முதல் பரீட்சார்த்த அடிப்படையில் மூன்று மாத காலத்திற்கு அனைத்து வார்டுகளிலும் பிளாஸ்டிக்கழிவுகளை பிரித்தெடுத்து வழங்க ஆர்வம் காட்டும் பொதுமக்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இத்திட்டத்தின்படி, பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் மெல்லிய பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்து ஒவ்வொரு வார்டு அலுவலகங்களிலும் புதன் மற்றும் சனிகிழமைகளில் காலை 9.00மணி முதல் 5.00மணி வரை அதற்கென நியமிக்கப்பட்டுள்ள சென்னை மாநகராட்சி ஊழியரிடம் வழங்கவேண்டும். பொதுமக்கள் வழங்கும் ஒவ்வொரு கிலோ பிளாஸ்டிக் கழிவுகளுக்கும் உதவி செயற் பொறியாளர் கையெழுத்திட்ட எண் இலக்கத்துடன் ஒரு டோக்கன் வழங்கப்படும்.
ஒவ்வொரு வார்டிலும் ஒவ்வொரு மாதமும் பொது மக்களால் வழங்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளின் மொத்த அளவு 500 கிலோவிற்கு அதிகமாகும் பட்சத்தில் மட்டுமே அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் புதன்கிழமையன்று முன் மாதத்தில் வழங்கப்பட்ட டோக்கன்களை கொண்டு குலுக்கல் நடத்தி பொது மக்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
குலுக்கலில் தேர்வு செய்யப்படுவோருக்கு முதல் பரிசாக 1/2 கிராம் தங்க நாணயமும், அடுத்த 5 நபர்களுக்கு கைகடி காரம் பரிசாக வழங்கப்படுகிறது.
எனவே, சுற்றுசூழல் மாசு ஏற்படுவதை கட்டுபடுத்தவும், சென்னை மாநகராட்சியின் பிளாஸ்டிக் கலந்த தார்சாலை அமைக்கும் பணிக்கு உதவும் வகையிலும் பொதுமக்கள் பயன்படுத்திய மெல்லிய பிளாஸ்டிக் கழிவுகளை சென்னை மாநகராட்சி வார்டு அலுவலகங்களில் ஒப்படைத்து பரிசுபெறும் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி கமிஷனர் விக்ரம்கபூர் கேட்டு கொண்டுள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !