மத்திய பிரதேச மாநிலத்தில் திருமணமான பெண்ணை அவளது கள்ளக் காதலன், ஆசிட் வீசி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பெண்ணின் உறவினர்களும் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வருகின்றனர்.
மத்திய பிரதேச மாநிலம் மொரீனா மாவட்டம், போர்சா நகரத்தைச் சேர்ந்தவர் ரூபி ராவட், 26. இவருக்கும், சஞ்சு என்பவருக்கும் திருமணம் நடந்தது. இருவரும் அம்பா நகரில், வாடகை வீட்டில் குடியேறினர். இந்நிலையில், அந்த வீட்டின் உரிமையாளரான யோகேந்திர தோமர், ரூபியிடம் தன் காதலைத் தெரிவித்தார். ரூபியும் அதற்குச் சம்மதித்ததால், இருவரும், மொரீனா நகர் சென்று தங்கியிருந்தனர். சில நாட்களில் தன் தவறை உணர்ந்த ரூபி, யோகேந்திர தோமரை பிரிந்து, ஆக்ராவில் தன் உறவினருடன் வசித்தார்.
பின், போர்சாவில் உள்ள தன் பெற்றோர் வீட்டிற்கு, உறவினர் ஜானுவுடன் வந்தார். இதை அறிந்த, யோகேந்திரா கடந்த சில தினங்களுக்கு முன்பு அங்கு சென்றார். இரவில், தன் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த ரூபி மீது ஆசிட் வீசினார். இதில், ரூபி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் படுகாயம் அடைந்தனர். பின், அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆசிட் வீச்சில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரூபி நேற்று சிகிச்சைப் பலனின்றி இறந்தார்.
அவரின் குடும்ப உறுப்பினர்கள், உயிருக்குப் போராடி வருகின்றனர். தலைமறைவாகியுள்ள யோகேந்திர தோமரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். இதற்கிடையில், ஆசிட் வீச்சுக்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.
ஆசிட் வீச்சு குற்றவாளிகளுக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத தண்டனை வழங்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உடனடியாக 3 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்றும் சில தினங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !