கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே எச்சரித்துள்ளதுடன் உயர்ஸ்தானிகராலயத்திற்கு ஏற்றவகையில் தன்னால் மனுவை விசாரிக்க முடியாது என்றும் நீதவான் தெரிவித்துள்ளார்.
ஹோட்டல் கட்டணத்தை செலுத்தாத பிரித்தானிய பிரஜையின் கடவுச்சீட்டை விடுவிக்குமாறு கோரி பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே நீதவான் திலின கமகே மேற்கண்டவாறு தெரிவித்தார். அந்த மனுவை நிராகரித்த நீதவான், உயர்ஸ்தானிகராலயத்திற்கு ஏற்றவகையில் வழக்கை விசாரிக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். கடவுச்சீட்டை கேட்டு உரிய நபர் மனுத்தாக்கல் செய்யவேண்டுமே தவிர, உயர்ஸ்தானிகராலயம் அல்ல என்றும் நீதவான் சுட்டிக்காட்டினார்.
பிரித்தானிய பிரஜையான ஹெலன் ஜோன் 17202 ரூபாவிற்கான கட்டணத்தை செலுத்தாது ஹோட்டலிலிருந்து வெளியேறிவிட்டதாக கொழும்பு கிரேன் ஒரியன்டல் ஹோட்டல் முகாமையாளர் முறைப்பாடு செய்துள்ளார்.
ஹோட்டலிருந்து வெளியேறியவர் தனது கடவுச்சீட்டை தவறுதலாக ஹோட்டலிலேயே விட்டுசென்றுவிட்டார். அவரது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைத்த பொலிஸார் அந்த கட்டணத்தை பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் செலுத்திவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இதனையடுத்து இந்த விவகாரத்தில் இணக்கத்தை ஏற்படுத்துவதற்கு ஹோட்டல் நிர்வாகமும் முன்வந்ததுள்ளதாக நீதிமன்றத்தில் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையிலேயே உரியவர் இன்றி உயர்ஸ்தானிகராலயத்தினால் கடவுச்சீட்டை கோரிநிற்பது சட்டத்திற்கு புரம்பான விடயமாகும் என்று தெரிவித்த நீதவான் அவ்வாறு கோரிநிற்கவேண்டாம் என்றும் எச்சரித்தார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !