திமுக ஆட்சியில் நடத்தப்பட்ட செம்மொழி மாநாட்டில் ரூ.200 கோடி (இந்திய ரூபாய்) ஊழல் நடந்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் ரமேஷ் பாபு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் கடந்த திமுக ஆட்சியின்போது 2010-ம் ஆண்டு கோவையில் செம்மொழி மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டிற்கு ரூ.380 கோடி செலவு செய்ததாக அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.
பின்னர் சட்டசபையில் செம்மொழி மாநாடு சம்பந்தமாக விவாதம் நடந்த போதும் ரூ.380 கோடி செலவு செய்ததாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் செம்மொழி மாநாட்டிற்கான செலவு தொகை எவ்வளவு என்று தமிழக அரசிடம் விண்ணப்பம் செய்தேன். இதற்கு பதில் அளித்த தமிழக அரசு செம்மொழி மாநாட்டிற்கு ரூ.150 கோடி செலவு செய்ததாக கூறியது. அதே போல 2010-2011-ம் ஆண்டு கணக்கு தணிக்கை அறிக்கையில் செம்மொழி மாநாட்டிற்கு ரூ.160 கோடி செலவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, செம்மொழி மாநாட்டில் குறைந்தது ரூ.200 கோடி வரை ஊழல் நடந்திருப்பது தெரிய வந்தது. இது சம்பந்தமாக கடந்த ஏப்ரல் மாதம் தமிழக இலஞ்ச ஒழிப்பு பொலிசாரிடம் புகார் செய்தேன்.
அதில் ரூ.200 கோடி ஊழல் செய்ததாக அப்போதைய முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், நிதி அமைச்சர் பேராசிரியர் அன்பழகன், திமுக எம்.பி. கனிமொழி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கூறியிருந்தேன்.
ஆனால் இதுவரை பொலிசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்த புகார் குறித்து வழக்குப் பதிவு செய்ய இலஞ்ச ஒழிப்பு பொலிசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார். இந்த மனு நீதிபதி சுதந்திரம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் கூடுதல் ஆதார ஆவணங்கள் தாக்கல் செய்ய இருப்பதால் வழக்கை தள்ளி வைக்குமாறு மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கு 4 வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !