அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் குற்றச்செயல்களைக் கண்காணிக்கும் சமூகப் பணியாளர் ஒருவர், கறுப்பின இளைஞர் ஒருவரை கொலைசெய்த குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளமையைக் கண்டித்து நாடெங்கிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
ஜோர்ஜ் சிம்மர்மேன் என்ற குறித்த பணியாளர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ட்ரேவோன் மார்ட்டின் என்ற 17 வயதான இளைஞன் உயிரிழந்தார். கடந்த வருடம் பெப்ரவரி மாதம் இச்சம்பவம் இடம்பெற்றிருந்தது. அக்காலப்பகுதியில் பெரும் பரபரப்பை இச் சம்பவம் ஏற்படுத்தியிருந்தது. தற்பாதுகாப்பு கருதியே குறித்த இளைஞனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாக ஜோர்ஜ் சிம்மர்மேன் தெரிவித்தார்.
ஜோர்ஜ் சிம்மர்மேனின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி அவரை விடுதலை செய்தது.
இதனையடுத்து தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரும்பாலான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ட்ரேவோன் மார்ட்டினின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரியுள்ளனர். நிவ்யோர்க் நகரில் சிறிய அளவில் தொடங்கிய ஆர்ப்பாட்டம் ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டத்துடன் பெரும் போராட்டமாக மாறியது. இதனிடையே, மக்களை அமைதிகாக்குமாறு ஜனாதிபதி ஒபாமா கோரிக்கை விடுத்திருந்தார். குற்றச்சாட்டுக்கு உள்ளான சமூகப் பணியாளர் ஜோர்ஜ் ஸிம்மர்மேன் மீது சிவில் வழக்கு தொடர முடியுமா என்று ஆராய்ந்துவருவதாக அமெரிக்க நீதி விவகாரங்களுக்கான துறை கூறியுள்ளது.
அமெரிக்க பிரபலங்கள் பலரும் இத்தீர்ப்பிற்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !