மட்டக்களப்பில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 23 பேர் வியாழக்கிழமை அதிகாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிப்பாளையம் கடற்கரையிலிருந்து சட்ட விரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்கு முற்பட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குருக்கள்மடம் இராணுவ முகாமுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்குச் சென்ற இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து இவர்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒன்பது பேர் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள் எனவும் 14 பேர் தமிழர்கள் எனவும் கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து வயதுக்குட்பட்ட ஐந்து குழந்தைகளும் உள்ளதாகவும் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.எச்.சுஜத் பிரியந்த தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் என தெரிவித்த பொலிஸார் அதிகமானோர் வவுனியா, குருணாகல், வென்னப்புவ மற்றும் களுவாஞ்சிக்குடி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பெருமளவான அரிசி, சீனி, சோயாமீட், முட்டைகள் உட்பட பெருமளவான உணவுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !