இலங்கை - இந்திய உடன்படிக்கை தற்போது செல்லுபடியற்றதாகிவிட்டது. எனவே இது தொடர்பிலும் 13ஆவது திருத்தம் தொடர்பிலும் பேசுவதற்காக மேனன் இலங்கை வருவதென்பது வெட்கப்பட வேண்டிய விடயமென அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய தெரிவித்தது.
எமது பிரச்சினையில் இந்தியா தலையிடாமல் இருக்குமானால் கச்சத்தீவை இந்தியா மீண்டும் பெற்றுக் கொள்வதில் எமக்கு எவ்விதமான ஆட்சேபனையும் இல்லையென்றும் ஹெல உறுமய தெரிவித்தது. இது தொடர்பாக ஜாதிக ஹெல உறுமயவின் பிரதி பொதுச் செயலாளரும் மேல் மாகாண சபை அமைச்சருமான உதய கம்மன்பில மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் வான் பரப்பை ஆக்கிரமித்து பலாத்காரமாகவே இந்தியா 1987இல் உடன்படிக்கையை செய்தது. எனவே இது உடன்படிக்கைகள் தொடர்பான சர்வதேச சட்டவிதிகளை மீறிய செயற்பாடாகும். அத்தோடு இந்திய - இலங்கை உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட போது இந்தியா எமக்கு உறுதிமொழிகளை வழங்கியது.
விடுதலைப் புலிகளிடம் இருந்து ஆயுதங்களைக் களைவதாகவும் இந்திய பூமியில் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள இடமளிக்கப்படாது என்றும் இந்தியா ஊடான கடற்பரப்பில் பயங்கரவாதிகள் நடமாட்டம் ஆயுத கடத்தலுக்கு இடமளிக்கப்படமாட்டதென்றும் இலங்கையிலுள்ள இந்தியப் பிரஜைகள் இந்தியாவுக்கு செல்ல விரும்பினால் அவர்களை அங்கு எடுப்பதாகவும் வட கிழக்கு உட்பட அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்படுமென்றும் இந்தியா உறுதிமொழியினை வழங்கியுள்ளது. ஆனால் இதில் ஒன்றையேனும் இந்தியா நிறைவேற்றவில்லை. புலிகளிடமிருந்து ஆயுதங்களை களையவில்லை. மாறாக யுத்தம் செய்து பயங்கரவாதத்தை தோல்வியடையச் செய்தோம்.
இலங்கைக்கு எதிராக இன்றும் தமிழ் நாட்டு பூமி பயன்படுத்தப்படுகிறது. ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர். எமது பெளத்த குருமார் தாக்கப்படுகின்றனர்.இந்திய - இலங்கை உடன்படிக்கை செய்து கொண்ட கால கட்டத்தில் ஆயுதக் கடத்தல் இல்லாமலிருந்த போதும் அதன் பின்னர் இடம்பெற்றது காயப்பட்ட புலி உறுப்பினர்கள் தமிழ் நாட்டில் சிகிச்சை பெற்றனர். இந்தியா செல்ல விரும்பும் இந்திய வம்சாவளியினரை திருப்பி எடுக்கவில்லை. எமது மக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படவில்லை. மாறாக இந்திய சமாதானப்படையினர் திருகோணமலையில் இருந்து சிங்களவர்களை வெளியேற்றினார்கள். எனவே எந்த விதத்திலும் இவ் உடன்படிக்கையை நோக்கினாலும் அது செல்லாக்காசாகி செல்லுபடியற்றதாகி பல காலம் ஆகிவிட்டது. இதனால் இவ் ஒப்பந்தம் தொடர்பிலும் 13ஆவது திருத்தம் தொடர்பிலும் பேசுவதில் இந்தியா வெட்கப்பட வேண்டும். அத்தோடு இப் பிரச்சினை தொடர்பாக பேசுவதற்காக இந்திய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை வருவாரானால் அதுவும் வெட்கப்பட வேண்டிய விடயமாகும்.
அத்தோடு அவசியமற்ற விஜயமும் ஆகும்.
கச்சதீவு
எமது பிரச்சினைகளை நாம் தீர்த்துக் கொள்வோம். எனவே கச்சதீவை இந்தியா பெற்றுக் கொண்டு
எமது பிரச்சினையில் தலையிடாமல் இருக்குமானால் கச்சதீவை இந்தியா பெற்றுக் கொள்வதில் எமக்கு ஆட்சேபனை எதுவும் இல்லை என்றும் அமைச்சர் உதயகம்மன்பில தெரிவித்தார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !