தமிழக முதல்வர் ஜெயலலிதாவை முதுமலையில் உள்ள குட்டியானை காவேரி திடீரென முட்டியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் பதறிப்போன முதல்வரின் பாதுகாவலர்கள் அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். முதல்வர் ஜெயலலிதா தற்போது கொடநாட்டில் தங்கி ஓய்வெடுத்து வருகிறார். அதோடு அரசாங்க அதிகாரிகளை சந்தித்து விவாதிப்பது, அறிக்கைகள் தயாரிப்பது என அங்கேயும் தலைமைச் செயலகம் போல பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.
கொடநாட்டில் தங்கியுள்ள முதல்வர், முதுமலை வனவிலங்குகள் காப்பகத்தில், மாலையில் வழக்கமாக நடைபெறும், யானைகளுக்கு சோறூட்டல் நிகழ்ச்சியைக் கண்டு கழிக்க சென்றார். முதல்வர் வருகையை ஒட்டி முதுமலையில் அவருக்கு 24 யானைகளை வைத்து வரவேற்பு கொடுக்கப்பட்டது. வரிசையாக நின்று தனக்கு வரவேற்பு கொடுத்த யானைகளுக்கு பழங்கள் கொடுத்து மகிழ்ந்தார் முதல்வர் ஜெயலலிதா.
இதன்போது காவேரி என்ற இரண்டு வயது குட்டியானைக்கு பழம், வெல்லம் கொடுத்து கொஞ்சிக்கொண்டிருந்தார் முதல்வர். அப்போது காவேரி ஆசீர்வாதம் செய்தது. அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து துதிக்கையை தூக்கி ஆசீர்வதித்தது. முதல்வர் சிரித்துக் கொண்டே அதிகாரிகளுடன் பேசிக் கொண்டிருந்தார்.
உடனே எதிர்பாராத விதமாக காவேரி திடீரென்று முதல்வரை முட்டியது. தொடர்ந்து இருமுறை இவ்வாறு செய்தது காவேரி. அதுவரை சிரித்துக் கொண்டிருந்த முதல்வர், திடீரென்று தடுமாறினார். இதனால் பதறிப் போன அதிகாரிகள் காவேரியை விலக்கி விட்டனர்.
இதில் முதல்வருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. முதல்வர் மீது குட்டியானை திடீரென முட்டியதால் சிறிது நேரம் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !