Headlines News :
Home » » சந்தையில் ஏலப்பொருளாக நிறுத்தப்பட்ட கிரேக்கத் தத்துவ ஞானி பிளேட்டோ!

சந்தையில் ஏலப்பொருளாக நிறுத்தப்பட்ட கிரேக்கத் தத்துவ ஞானி பிளேட்டோ!

Written By TamilDiscovery on Wednesday, June 12, 2013 | 9:11 AM

சுமார் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முந்தைய காலம். கிரேக்கத் தத்துவ ஞானி பிளேட்டோ, ‘குடியரசு’ எனும் அரசியல் ஆய்வு நூலில், முடியாட்சியையும் மக்களாட்சியையும் கடுமையாக விமர்சித்து இருந்தார். அரசியல் ஞானம் இல்லாத மக்களால் தேர்வு செய்யப்படும் தலைவர்கள் தலைமைக்குத் தகுதியானவர்கள் அல்ல என வாதிட்டதுடன் நில்லாமல், தலைவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமும் வகுத்திருந்தார்.

பிளேட்டோவின் அரசியல் ஞானத்தை அறிந்த சிசிலி நாட்டின் அரசன் டேயானியஸ், “நீங்கள் ஆசைப்பட்டதுபோல் ஐரோப்பிய கண்டம் முழுவதற்கும் ஒரு லட்சிய அரசு அமைக்கலாம், வாருங்கள்” என அழைப்பு விடுத்தான். ஆசையோடு வந்த பிளேட்டோ, அரசன் ஆடம்பரப் பிரியனாகவும், நாடு பிடிக்க விரும்பும் சுயநலக்காரனாகவும் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அரசவையிலேயே, “உன் தலைமையில் லட்சிய அரசு அமைக்க முடியாது. உனது சுயநலத்தால் இந்தப் பதவியையும் நீ விரைவில் இழந்துவிடுவாய். சுயநலமற்றவனையே தலமை தேடி வரும்!” என்று தைரியமாகச் சொன்னார்.

ஆத்திரமடைந்த அரசன், பிளேட்டோவை அடிமையாக விற்க உத்தரவிட்டான். சந்தையில் ஏலப்பொருளாக நிறுத்தப்பட்ட பிளேட்டோவை, அவரது மாணவர் அன்னிசெரஸ் பெரும் கிரயம் கொடுத்து மீட்டார்.

கிரேக்க நாட்டின் ஏதென்ஸ் நகரில் கி.மு. 427-ல் ஒரு பிரபுவின் வீட்டில் செல்வச் செழிப்பில் பிறந்த பிளேட்டோ, சிறு வயதிலேயே சோக்ரடீஸின் தத்துவஞானத்தில் மயங்கி, அவரது சீடரானார். சாக்ரடீஸிக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டபோது, பிளேட்டோவின் வயது 28. சோக்ரடீஸின் மறைவுக்குப் பின், அவரது மாணவர்கள் பிளேட்டோவைத் தேடி வந்து தம் தலைவராக ஏற்றுக்கொண்டனர். ‘சோக்ரடீஸிக்கு மரண தண்டனை அளித்த மக்களாட்சி, ஓர் இழிவான ஆட்சிமுறை’ என வெளிப்படையாகக் குற்றம்சாட்டிய பிளேட்டோவையும் ஆட்சியில் இருந்தவர்கள் கைது செய்ய முயன்றனர். அவர் ஏதென்ஸில் இருந்து வெளியேறி இத்தாலி, சிசிலி, எகிப்து போன்ற நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து, அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறையை ஊன்றி கவனித்தார். ஏதென்ஸ் நகரில் ஆட்சி மாற்றம் நடந்த பின்னர் தாய் மண்ணுக்குத் திரும்பினார்.

“செருப்பு அறுந்தால், கதவு பழுதானால், நோய் வந்தால் சம்பந்தப்பட்ட நிபுணர்களிடம் செல்லும் மனிதர்கள், ஆட்சி செய்யும் பொறுப்பை மட்டும் எந்தத் தகுதியும் இல்லாதவரிடம் ஒப்படைப்பது சரிதானா?” என்று கேள்வி கேட்டு, ஆட்சி செய்பவர்களுக்குச் சில தகுதிகளையும் வகுத்தார். “பத்து வயது வரை சுதந்திரமாகவும், அதற்குப் பின் கட்டாயப்படுத்துதல் இன்றி பத்து வருடம்விருப்பமாகக் கல்வி பயின்றும், அதன் பின் தத்துவ ஞானம் அறிய சுற்றுப்பயணம் செய்து மக்கள் வாழ்வை நேரடியாக அறிந்தும்… இப்படியாக ஐம்பது வயது வரை வாழ்வைப் படித்தவனே ஆட்சி செய்யத் தகுதி படைத்தவன். அவன் திருமணம் முடிக்கமாட்டான்; தாழ் போட்டு உறங்கமாட்டான். அவனுக்காக மற்றவர்கள் உழைப்பார்கள்; அவன் மற்றவர்களுக்காக உழைப்பான். அப்படிப்பட்ட சுயநலமற்றவனே தலமைக்குத் தகுதியானவன்” என்றார்.

‘இருபது வயதுக்குட்பட்ட பெண்களும், முப்பது வயதுக்குட்பட்ட ஆண்களும் திருமணம் முடிக்கக் கூடாது; செல்வம் சேர்ப்பதற்கு உச்ச வரம்பு வேண்டும்; தனிமனித உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்’ என எத்தனையோ புரட்சிக் கருத்துக்கள் பிளேட்டோவின் நூலில் ஒளிந்திருப்பதால்தான், எமர்ஸன் என்றதத்துவஞானி, “பிளேட்டோவின் ‘குடியரசு’ நூலை மட்டும் வைத்துக்கொண்டு,உலகில் உள்ள மற்ற எல்லா நூல்கைளயும் எரித்துவிடலாம்” என்றார். திருமணமே செய்துகொள்ளாமல் நாடோடியாக வாழ்ந்து, எண்பதாவது வயதில் தூக்கத்திலேயே மரணமெய்திய பிளேட்டோவின் இறுதி ஊர்வலத்தில் ஏதென்ஸ் நகரமே திரண்டுவந்து, பிரியாவிடை கொடுத்தது!

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template