சவூதி அரேபியாவுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்று அங்கு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கும் தமது மகளை மீட்டுத் தருமாறு ஏறாவூர் நகர பிதா அலிஸாஹிர் மெளலானாவிடம் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு வாகரை ஐம்பது வீட்டுத் திட்டக் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த தேவராசா பானுமதி என்ற வீட்டுப் பணிப்பெண்ணுக்கே சவூதி அரேபியாவில் இந்தக் கதி நேர்ந்துள்ளது.
இது குறித்து ஏறாவூர் நகர முதல்வர் அலிஸாஹிர் மெளலானாவிடம் நேற்று பானுமதியின் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளார்.
தமது பெண்ணுக்கு நடந்த கதி குறித்து பெற்றோர் நகர பிதாவிடம் முறையிடுகையில் சென்ற வருடம ஒக்டோபர் மாதம் வீட்டுப் பணிப்பெண்களாக சவூதி நோக்கிப் புறப்பட்ட தமது மகள் அடி ,உதை ,கொதிநீரை உடம்பில் ஊற்றுதல் உட்பட்ட பல்வேறு சித்திரவதைகளுக்கு உட்பட்டுள்ளார்.
அத்துடன் அவர் பணிபுரிந்த காலத்தில் எதுவிதமான வேலைக் கொடுப்பனவும் வழங்கப்படவில்லை. கடைசியாக இவ்வருடம் பெப்ரவரி மாதம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தான் கொதி நீரால் சித்திரவதைக்குட்பட்டுள்ளதாகவும் தன்மை எப்படியாவது இந்த வீட்டின் சித்திரவதைகளிலிருந்து காப்பாற்றுமாறும் கூறினார்.
அதன் பின்னர் அவருடனான எந்தவிதமான தொடர்புகளும் அறுந்து போய்விட்டன. இந்த விடயம் தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் முறையிட்டும் இதுவரை அவர்கள் நம்பிக்கை தரக்கூடிய பதில் எதுவும் தரவில்லை என்றும் கூறினார்.
இவ்விடயம் குறித்து சம்பந்தப்பட்டவர்களின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக அலிஸாஹிர் மெளலானா தெரிவித்தார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !