கிளிநொச்சி, இரணைமடுவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்புலிகளால் பயன்படுத்தப்பட்ட ஓடுதளம் இலங்கை விமானப்படையினரால் புனரமைக்கப்பட்டுள்ளதுடன் அந்த ஓடுதளம் சனிக்கிழமை 15 ஆம் திகதி திறந்துவைக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினாலேயே இந்த ஓடுதளம் திறந்துவைக்கப்படவுள்ளது.
இலங்கை விமான படை வரலாற்றில் முதன்முறையாக விமான படையினரின் சக்தியை பயன்படுத்தி சர்வதேச தரத்திற்கு அமைவாக இந்த ஓடுதளம் நிர்மாணிக்க்பட்டுள்ளது என்றும் விமானப்படை அறிவித்துள்ளது.
ஓடுதளம் 1500 மீற்றர் நீளமும் 25 மீற்றர் அகலத்தையும் கொண்டிருக்கின்றது. இதற்கான திட்டம், பொறியியல், நிரமாணம், உபகரங்கள் மற்றும் தொழில்நுட்பம் என்பன விமான படையினருடையது என்று இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது.
அதேபோல இலங்கை விமானப்படையிடம் இருக்கின்ற மிக பெரிய விமானமான சீ-130 விமானத்தையும் இந்த ஓடுதளத்தில் ஏற்றியிறக்க கூடியவகையில் நிரமாணிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி, இரணைமடு ஓடு தளத்திற்கு இரண்டு வழிகளில் வருகைதரலாம் என்றும் விமானப்படை அறிவித்துள்ளது.
மாங்குளம், அம்பாகாமம் ஓலுமடு ஊடாக வருகைதரலாம். அப்படியின்றேல், கிளிநொச்சி,வடக்கச்சி, ராமநாதபுரம் மற்றும் கல்மடுவூடாக வருகைதரலாம்.
இலங்கை விமானப்படை வரலாற்றில் வரலாறு படைத்துள்ள இந்த இரணை மடு ஓடுதளத்துடன் மன்னார், வவுனியா,பலாலி உட்பட வடக்கில் நான்கு ஓடுதளங்கள் இருக்கின்றன.
தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து கிளிநொச்சி, இரணைமடு ஓடுதளம் மீட்கப்பட்டதையடுத்து விமான தலைமையகத்தின் அனுமதியுடன் 2009 ஆம் ஆண்டு யூன் மாதம் 21 ஆம் திகதி 20 விமான படையினரின் திட்டத்துடன் மறுநாள் 22 ஆம் திகதி இரணைமடு விமானப்படை முகாம் அமைக்கப்பட்டது.
2009 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி முதல் தடவையாக விமானப்படையின் கொடி இரணைமடு விமாப்படை முகாமில் ஏற்றப்பட்டது. அந்த வைபவத்தில் அதிகாரிகள் மூவர் உட்பட 12 பேர் கலந்துக்கொண்டனர்.
2011 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 03 ஆம் திகதி இரணைமடு விமான ஓடுபாதை புனரமைப்பு பணிகள் ஆரம்பமாகின அதன் நிர்மானப்பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் 15 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஓடுதளம் திறந்து வைக்கப்படும் என்றும் விமானப்படை அறிவித்துள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !