பெங்களூர் மெட்ரோ ரயிலில் இரண்டு பெண்களிடம் விஷமத்தனம் செய்த நான்கு இளைஞர்கள் இரகசியக் கேமராவில் சிக்கியுள்ளனர்.
அவர்களை உடனடியாக பிடிப்பதற்குப் பதில் கோட்டை விட்டு விட்டு இப்போது பிரச்சினை பெரிதாகியுள்ளதால் தேடி வருகிறது பெங்களூர் பொலிஸ்.
12 நாட்களுக்குப் பிறகு இந்த இளைஞர்களை பொலிஸார் இரகசியக் கண்காணிப்பு கேமரா மூலம் அடையாளம் கண்டுள்ளனர். அதேசமயம், பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரை மெட்ரோ அதிகாரிகள் அலட்சிய பாவத்துடன் கையாண்டதும் அனைவரையும் அதிருப்தி அடைய வைத்துள்ளது.
இத்தனைக்கும் இந்த பொறுக்கி இளைஞர்கள் அந்தப் பெண்ணை காவலர்கள், அதிகாரிகள் முன்பு கேலி செய்து சில்மிஷம் செய்தபோது யாருமே தட்டிக் கேட்கவில்லை என்பதுதான் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் அபயக் குரல் எழுப்பி உதவி கோரியும் யாருமே உதவிக்கு வரவில்லை. பாதுகாவலர்கள் உள்ளிட்டோர் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட பெண் கல்லூரி மாணவி ஆவார். அக்டோபர் 12ம் திகதி மெட்ரோ ரயிலில் பயணித்தபோதுதான் இந்த விபரீதம் நடந்துள்ளது. இதுகுறித்து அந்தப் பெண் கூறுகையில்,
மெட்ரோ பாதுகாவலர்கள், அதிகாரிகள் முன்னிலையில் என்னை அந்த நால்வரும் மிரட்டினர், கேலி செய்தனர், சீண்டினர். யாருமே எனக்கு உதவிக்கு வரவில்லை. அனைவரும் அவர்களை அமைதிப்படுத்தி அனுப்புவதிலேயே குறியாக இருந்தனர்.
நடந்த தவறை கண்டிக்கவில்லை. அவர்களைத் தடுக்கவும் இல்லை. மேலும் இதை பிரச்சினையாக்க வேண்டாம் என்றும் என்னைக் கேட்டுக் கொண்டனர்.
பின்னர் என்னை பொலிஸில் சென்று புகார் கொடுக்குமாரு அவர்கள் அறிவுறுத்தினர். நான் மெட்ரோ அதிகாரிகளுக்கும் எழுத்துப்பூர்வமான புகார் கொடுத்துள்ளேன் என்றார்.
இதற்கிடையே, அந்த மாணவியையும், வீனு ஆல்பர்ட் என்ற இன்னொருவரையும், அந்த நான்கு இளைஞர்களும் ரயிலில் நிலையத்தில் கிண்டல் செய்து மிரட்டியது சிசிடிவி கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
அந்த வீடியோ காட்சி தற்போது கிடைத்துள்ளது. மெட்ரோ பாதுகாவலர்களிடம் அவர்கள் இருவரும் முறையிடுவதும், உதவி கேட்பதும் தெளிவாக காட்சியாக பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்திற்குப் பின்னர் அந்த நால்வரையும் மெட்ரோ பாதுகாவலர்கள் தங்களது அறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் கடும் வாக்குவாதம் நடந்துள்ளது. ஆனால் பொலிஸாரை கூப்பிடவேயில்லை மெட்ரோ அதிகாரிகள். மேலும் பாதிக்கப்பட்ட மாணவி பொலிஸில் கொடுத்த புகாரும் பத்து நாட்களுக்கு மேல் கண்டு கொள்ளப்படாமலேயே இருந்துள்ளது.
இப்போதுதான் அந்தப் புகாரைப் பதிவு செய்துள்ளனர். தற்போது அந்த நால்வரையும் தேடத் தொடங்கியுள்ளனர் பொலிஸார். இந்த விவகாரம் பெரிதாகியுள்ளதால் தற்போது நால்வரையும் பொலிஸார் தீவிரமாக தேடிவருகின்றனராம்.
எம்.ஜி. சாலையிலிருந்து பையப்பனஹள்ளி சென்ற மெட்ரோ ரயிலில்தான் இந்த விவகாரம் நடந்துள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !