யாழில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் தனியாக அறையில் இருப்பதை விபச்சாரமாக எடுத்துக் கொள்ளமுடியாது என யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்த கருத்துக்கு எதிராக யாழ்.மாவட்ட பெண்கள் அமைப்புக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளன.
யாழ். மாவட்டத்தில் கலாசாரச் சீரழிவு நடவடிக்கைகளை பொலிஸார் ஊக்குவிக்கின்றனர் என அந்த பொண்கள் அமைப்புக்கள் யாழ்.பொலிஸாரின் செயற்பாடுகள் பற்றி விமர்சித்துள்ளனர். யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற சிவில் பாதுகாப்பு குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பதிவு செய்யப்படாத விடுதிகள் மற்றும் சமூக சீர்கேடான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடும் போதே இதனை சுட்டிக்காட்டினர். அண்மையில் சாவகச்சேரி பிரதேசத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்ணும், ஆணும் விடுதிகளில் தங்குவது தடையில்லை என்று பொலிஸ் தரப்பினால் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு மறுத்துரைத்த பெண்கள் அமைப்புக்கள், யாழ். மாவட்டத்தில 18 வயதுக்கு மேற்பட்டவர்ளுக்கு எதிராக நீங்கள் நடவடிக்கை எடுக்காதது விபசாரத்தை ஊக்கப்படுத்தும் ஆலோசனையாகவே இது அமையும் என்றும் சுட்டிக்காட்டினார்.
இதற்கு பதிலளித்த யாழ் பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் முகமட் ஜெப்றி,
யாழ். மாவட்டத்தில் 40 க்கு மேற்பட்ட விடுதிகள் உள்ளன. இந்த விடுதிகளில் 18 வயதிற்கு மேற்பட்ட இருவர் தங்கள் சுயவிருப்பின் பேரில் தங்கியிருந்தால் அவர்களுக்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியாது. அவர்களின் சுயமரியாதையினையும் கருத்தில் எடுக்க வேண்டும். அத்துடன் யாழில் நடைபெறுவதை விபச்சாரம் என்று சொல்ல முடியாது. விபச்சாரத்திற்கும் இங்கு நடைபெறும் சம்பவங்களுக்கும் தொடர்பில்லை என்று தெரிவித்தார்.
இதேவேளை பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் தனியாக அறையில் இருப்பதை விபசாரமாக எடுத்துக்கொள்ள முடியாது என யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்தார். யாழ் நகரப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்டு ஒரு ஜோடியினர் யாழ் பிரதேச செயலாளரினால் பிடிக்கப்பட்டனர். இவ்விடயம் தொடர்பாக விடுதி முகாமையாளரினால் யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதுடன், பிரதேச செயலாளரின் நடவடிக்கை தவறானது என சுட்டிக்காட்டப்பட்டது. இதன்போது குறித்த விடுதி முறையற்ற ரீதியில் நடத்தப்படுவதாக யாழ் பிரதேச செயலர் சுகுணரதி தெய்வேந்திரம் சுட்டிக்காட்டியுள்ளார்.
மதுபானசாலைக்கான வரி அனுமதியின்றி விடுதி நடத்தப்படுவதாக கிடைத்த தகவல்களை அடுத்து அவ்விடயம் தொடர்பாக ஆராயச் சென்ற வேளையிலேயே குறித்த யுவதி இளைஞருடன் தனியாக இருந்ததாகவும், யுவதியிடம் அடையாள அட்டை இல்லாத நிலையில் இருந்தார் என்றும் பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார். அங்கிருந்த யுவதியை மீட்டு அவரின் பெற்றோரிடம் ஒப்படைத்தாகவும், பெண்கள் அமைப்பின் படி, தான் செய்தது சரியென்றும் பிரதேச செயலாளர் சுட்டிக்காட்டினார்.
இதற்குப் பதிலளித்த யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிகேரா, தன்னைப் பொறுத்தவரையில் 18 வயது பெண்ணும். 21 வயது ஆணும் தனியாக அறையில் இருப்பது விபச்சாரமல்ல, காசுக்காக பெண்ணொருவர் பல இளைஞர்களுடன் இருப்பது தான் விபச்சாரமாகும் என குறிப்பிட்டார்.
இவ்வாறு யாழ் நகரில் விபசாரம் நடக்கின்றது என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து அது உறுதிப்படுத்தப்படுமாயின், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்துள்ளார். வடக்கில் வேறு கலாசாரம், தெற்கில் வேறு கலாசாரம் அல்ல. ஆனால் வடக்கிலும் தெற்கிலும் சட்டம் ஒன்று தான், நாங்கள் சட்டத்தின் படி பார்க்கின்றோம் என்றும் யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிகேரா மேலும் தெரிவித்தார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், யாழ் மாநர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, மருதங்கேணி பிரதேச செயலாளர் திருலிங்கநாதன், பருத்தித்துறை பிரதேச செயலாளர் ஜெயசீலன் மற்றும் பிரதேச வாழ் மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !