32 ஆண்டுகளுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடிக்க, பாலச்சந்தர் இயக்கிய திரைப்படம் 'தில்லு முல்லு'. ரஜினியின் எவர்கிரீன் க்ளாஸிக் திரைப்படங்களில் இந்த திரைப்படத்துக்கு முக்கிய இடம் உண்டு. வசூல், தரம், கலைஞர்களின் பங்களிப்பு என அனைத்து வகையிலும் ரசிகர் மனங்களைக் கொள்ளை கொண்ட திரைப்படம் இது.
இந்த திரைப்படத்தை 32 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றைய தலைமுறைக்கேற்ப ரீமேக் செய்துள்ளனர். எஸ்.ஆர்.எம் குழுமத்தின் வேந்தர் மூவீஸ் பெரும் விலைக்கு இதன் ரீமேக் உரிமையை பாலச்சந்தரிடமிருந்து பெற்று தயாரித்துள்ளனர். கிட்டத்தட்ட 7.5 கோடி ரூபாய் பட்ஜெட் என்கிறார்கள்.
இந்த திரைப்படத்தின் ஒரிஜினல் வடிவம் இந்தியில் வெளியான கோல்மால். அமோல் பாலேகர் நடிக்க, ஆர்டி பர்மன் இசைக்க பெரும் வெற்றி கண்ட திரைப்படம். அதைத்தான் உரிமை பெற்று தில்லுமுல்லு ஆக்கினார் கேபி. தில்லுமுல்லு திரைப்படத்தில் ரஜினிக்கு அடுத்து மிக முக்கியமான கதாபாத்திரம் தேங்காய் சீனிவாசனுக்குதான். கிட்டத்தட்ட இன்னொரு ஹீரோ அவர்.
திரைப்படம் முழுக்க ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி எனும் சீரியஸான அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு கலக்கியிருப்பார் மனிதர். ரீமேக்கில் அந்த கதாபாத்திரத்தை செய்திருப்பவர் பிரகாஷ் ராஜ். தேங்காயை ஜஸ்ட் நெருங்க முடிந்தால் கூட அவருக்கு வெற்றிதான். பார்க்கலாம்!
மீனாட்சி துரைசாமி என்ற பெயரைக் கேட்டாலே தில்லுமுல்லு திரைப்படம் தன்னால் நினைவுக்கு வந்துவிடும். அந்த அளவு அருமையாக நடித்திருப்பார் சௌகார் ஜானகி. ரீமேக்கில் அந்த கதாபாத்திரம் கோவை சரளாவுக்கு.
இரு திரைப்படங்களின் கதையும் ஒன்றுதான் என்றாலும், ரீமேக்கில் திரைக்கதையை மொத்தமாக மாற்றியுள்ளனர். க்ளைமாக்ஸையும் மாற்றியுள்ளனர். வாரம் ஒருமுறை பழைய தில்லு முல்லுவைப் பார்த்தவர்கள், இந்த ரீமேக்கை எப்படி ரசிப்பார்கள் என்பது தெரியவில்லை.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !