திருப்பூர்: திருப்பூர்-ஈரோடு மாவட்ட எல்லையிலுள்ள கொடுமணல் கிராமம் 2,500 ஆண்டுகளுக்கு முன் வணிக பெருநகரமாக விளங்கியதற்கான ஆதாரங்கள் அகழ்வாராய்ச்சியின் மூலம் கிடைத்துள்ளன.
திருப்பூர்-ஈரோடு மாவட்ட எல்லையில் நொய்யல் ஆற்றின் கரையில் உள்ளது கொடுமணல் கிராமம். சங்க காலத்தில் வணிக பெருநகரமாக, பதிற்றுப்பத்தில், "கொடுமணம்பட்ட... வினைமான் அருங்கலம்' என்ற பாட்டில் மிகச் சிறந்த தொழிற்கூடங்கள் அமைந்திருந்ததற்கான சான்றுகள் உள்ளன. இது, சேர மன்னர்களின் தலைநகரமாக விளங்கிய கரூரையும், வணிக தொடர்புக்கு பயன்பட்ட மேலைக்கடற்கரை துறைமுகமான முசிறி பட்டணத்தையும் இணைக்கும் கொங்கப்பெருவழி'யில் அமைந்துள்ளது.
கொடுமணல் பகுதியில் தொல்லியல் துறை செம்மொழி உயராய்வு மையம் மற்றும் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் உதவியுடன் அதன் பேராசிரியர் ராஜன் தலைமையிலான குழுவினர் கடந்த இரண்டு மாதமாக ஆய்வு செய்துள்ளனர். ஆய்வின்போது, தமிழ்பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட மண்பாண்டங்கள்; ஆட்பெயர்கள், குறியீடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழ்பிராமி எழுத்துக்கள், இலக்கண பிழையின்றி உள்ளன. 2, 500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் படிப்பறிவில் சிறந்தவர்களாக இருந்ததற்கு சான்றாக இவை கிடைத்துள்ளன. பிற நாடுகளுடன் வணிக தொடர்புகளை வைத்திருந்ததற்கு சான்றாக வெள்ளி முத்திரை நாணயங்கள், வடக்கத்திய கருப்பு வண்ணம் மெருகேற்றப்பட்ட மண்பாண்டங்களும் கிடைத்துள்ளன. மேலும் விலை உயர்ந்த கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட தொழிற்கூடங்கள், நெசவுத்தொழில், நூல் நூற்க பயன்பட்ட தக்களி, தந்தத்தால் செய்யப்பட்ட நூல் நூற்க பயன்படும் உபகரணம், இறந்தவர்களை புதைக்கும் ஈமக்காட்டில், பெருங்கற்படை ஈமச்சின்னங்கள், சுடுமண் தக்கலி, சுடுமண் மணிகள், தந்தத்தால் செய்யப்பட்ட அணிகலன்கள், கூரை ஓடுகள், கார் நீலியன் எனப்படும் சூதுபவள மணிகள், பளிங்கு கற்கள், வைடூரியம், வீடு, தொழிற்கூடங்கள், 218 மணிகள், சங்கு அணிகலன்கள் என நூற்றுக்கணக்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 50 ஏக்கர் பரப்பளவுள்ள வாழ்விட பகுதியில் 9 அகழாய்வு குழிகளும், 100 ஏக்கர் பரப்பளவுள்ள ஈமக்காட்டில், நடுகல், வட்ட கல் என 100 ஈமச்சின்னங்கள் உள்ளன. இதில் ஒரு ஈமச்சின்னமும் தோண்டப்பட்டுள்ளது.
இதில், மூன்று அறைகள், வடமேற்கு மூலையில் உயர் வெண்கல குவளை, கீழ் பகுதி சல்லடை போல் அமைப்பும் இருந்தது. வணிகர்கள் அதிகளவு வந்து தங்கியிருந்ததும் 1912ம் ஆண்டு, ஐந்து கல் தொலைவில் உள்ள கத்தாங்கண்ணியில் கிடைத்த ரோமானிய நாணய குவியலும், வணிக தொடர்புகளை உறுதிப்படுத்துகின்றன. தமிழ் பிராமி எழுத்து பொறித்த மண்பாண்டங்கள் கிடைத்ததும், எழுத்து இலக்கண பிழையில்லாமல் உள்ளதால் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களின் கல்வி அறிவை விளக்குகிறது. வடக்கத்திய கருப்பு வண்ணம் மெருகேற்றப்பட்ட மண்பாண்டங்கள் பிராகிருத மொழியில் பெயர் பொறித்து ஆட் பெயர்கள், பெருங்கற்படை சின்னங்கள், இனக்குழு சார்ந்த வாழ்வியலையும், அவர்களுக்கு தேவையான உணவு உற்பத்திக்கு வேளாண் தொழில் மேற்கொண்டதற்கான உழவு, அறுவடைக்கான உபகரணங்கள், சேமிப்பு கிடங்குகள், கால்நடை எலும்புகள் அதிகளவு கிடைத்துள்ளதால் கால்நடை வளர்ப்பும் சிறந்து விளங்கியுள்ளது தெரிய வந்துள்ளது.
400 ஆண்டுகள் பழமையான ஓலைச் சுவடிகள் கண்டுபிடிப்பு: திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே உள்ள பூலாம்பட்டியில் பாழடைந்த கிணற்றில் ஓலைச்சுவடிகள் கிடந்தன. தொல்லியல் ஆர்வலர் நந்திவர்மன் இதனை கண்டுபிடித்து எடுத்துள்ளார். இந்த ஓலைச்சுவடிகள் 400 ஆண்டுகள் பழமையானவை என தெரிய வந்துள்ளது. இது குறித்து நந்திவர்மன் கூறுகையில், இதில் ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், உலகநீதி, மூதுரை, விநாயகர் அகவல், பழநி முருகன் காவடி சிந்து, பெரியநாயகி அம்மன் துதி, ராமாயண உரைநடை, மருத்துவச்சுவடிகள், திருமண மொய் கணக்கு, திருமண அழைப்பு, வரவு, செலவு ஓலைச்சுவடிகள் உட்பட 1,500க்கும் மேற்பட்ட சுவடிகள் உள்ளன. இவற்றில் ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன் போன்றவை நகல்களுக்காக எழுதப்பட்டவை. சிலவற்றில் இதுவரை அச்சில் வராத தெய்வப் பாடல்கள் தூய தமிழில் உள்ளன.
திருமண சுவடியில் மணமக்களின் பெயர் மற்றும் மொய் அளித்தவர்களின் விபரங்கள் உள்ளன. வரவ, செலவு சுவடியில் வட்டிக்கு பணம் கொடுத்த விபரம், அதற்கு ஈடாக பெற்ற பொருட்களின் விபரங்கள் உள்ளன. ஓலைச்சுவடிகள் 40 செமீ நீளம், 3 செமீ அகலத்தில் உள்ளன. வடமொழி சொற்கள் ஆங்காங்கே அரிதாக உள்ளன. இந்த சுவடிகள் அருங்காட்சியக நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் என்றார்.
Home »
» 2,500 ஆண்டுகளுக்கு முன் புதைந்த நகரம் கண்டுபிடிப்பு.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !