விஜய் நடித்துள்ள தலைவா படத்தை பார்த்து அறிக்கை தாக்கல் செய்ய வக்கீலை கமிஷனராக நியமிக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில், நெல்லை மாவட்டம் சீதாபார்பநல்லூர் கிராமத்தை சேர்ந்த எஸ்.கே.ஆர்.கர்ணன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,
என் தாத்தா எஸ்.எஸ்.கே. என்று அழைக்கப்படும் எஸ்.எஸ். கந்தசாமி சேட், சுதந்திரத்துக்கு முன்பே சீதாபார்பநல்லூரில் இருந்து மும்பை தாராவிக்கு சென்று, தோல் பதனிடும் தொழிலை செய்து வந்தார்.
இவர், தாராவி தமிழர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். அதேபோல, எஸ்.எஸ்.கே.வின் மகனும், என் தந்தையுமான எஸ்.கே.ராமசாமி, பல்வேறு சமுதாய சேவைகளை செய்து, பிரபலமடைந்தார். இவரை தாராவியின் தலைவர் என்று மக்கள் அழைத்தனர். இந்த நிலையில் பத்திரிகை செய்தியை படித்தபோது, எனது தாத்தா மற்றும் தந்தையின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ‘தலைவா’ என்ற படம் தயாரிக்கப்படுவதாக தெரியவந்தது.
இந்த படத்தில், என் தாத்தா, தந்தை ஆகியோர் ‘தாதா’ போல சித்தரிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த படத்துக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி தீபிகா சுந்தரவதனா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைவா படத்தின் இயக்குனர் ஏ.எல்.விஜய் பதில் மனு தாக்கல் செய்தார்.
அதில், ‘தலைவா படத்தின் கதை கற்பனையானது. தனிப்பட்ட நபர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து படம் எடுக்கப்படவில்லை. எனவே கர்ணனின் மனுவை தள்ளுபடி செய்யவேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் கர்ணன் மற்றொரு மனுவை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது.
தலைவா படம் வெளியான பின்னர், தமிழகத்திலும், மும்பையிலும் எங்கள் குடும்பத்துக்கு இருந்த மரியாதை அழிக்கப்பட்டு விட்டது. இந்த படத்தை பார்த்த பின்னர், எங்கள் குடும்பத்தில் உள்ள குழந்தைகள் எங்களை ஒரு மாதிரியாக பார்க்கின்றனர். மும்பை தாராவியில் என் தாத்தாவும், தந்தையும் வாழ்ந்த முறை இந்த படத்தில் காட்டப்பட்டுள்ளது. எனவே இந்த படத்தில் வரும் காட்சிகளை பார்த்து, என் தாத்தா, தந்தை ஆகியோரது வாழ்க்கையோடு ஒப்பிட்டு அறிக்கை தாக்கல் செய்வது என்பது அவசியமாகிறது.
எனவே இதற்கு ஒரு வக்கீலை ‘கமிஷனராக’ நியமித்து, தலைவா படத்தை பார்த்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை வரும் 13-ம் திகதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
தலைவா வசூல் சாதனை.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !