இலங்கையில் மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் தன்னை சந்தித்த சமூக ஆர்வலர்கள் தாக்கப்படுகின்றமை குறித்து நவநீதம்பிள்ளை இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐநா மனித உரிமை பேரவையின் 24 ஆவது பருவகால அமர்வு நேற்று (09) ஆரம்பமானபோது இலங்கை குறித்து உரையாற்றிய நவநீதம்பிள்ளை இவ்வாறு குறிப்பிட்டார்.
இலங்கையில் மனித உரிமை ஆர்வலர்களை பாதுகாக்கும்படி அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மனித உரிமைகள் விடயம் குறித்து ஐநா சபையுடன் இணைந்து பணியாற்றப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பான் கீ மூன் தனது அறிக்கை மூலம் தமக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த ஒத்துழைப்பின் அடிப்படையில் 2012 ஜூன் 16 தொடக்கம் 2013 ஜூன் 15 வரை மனித உரிமை ஆர்வலர்கள் மீதான அச்சுறுத்தல் சம்பவங்கள் குறித்து ஆராயப்பட்டதாக அவர் கூறியுள்ளார். இலங்கை விஜயத்தின் போது தனக்கு சிறந்த ஒத்துழைப்பு வழங்கிய இலங்கை அரசாங்கத்திற்கு நவநீதம்பிள்ளை நன்றி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று புனரமைப்பு, சமரசம் மற்றும் பொறுப்புகூறல் விடயங்கள் குறித்து ஆராய வசதி செய்து கொடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மத சகிப்புத் தன்மை இன்மை, நிர்வாக மற்றும் சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமை குறித்து இலங்கையில் ஆராய்ந்ததாக நவநீதம்பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.
தனது அவதானிப்புக்களை அடுத்த அறிக்கையில் தெரிவிப்பதாகவும் ஆனால் தன்னை சந்தித்த ஊடகவியலாளர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் தாக்குதல் மற்றும் அச்சுறுத்தல்களில் இருந்து உடன் பாதுகாக்கப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !